உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராணி

59

உமது காலடியிலே சிக்கி சிதைந்துபோன சிற்றெறும்பு, புழு பூச்சி எவ்வளவு! அவை கொலையல்லவா? பாபமல்லவா? போர்க்களந்தானா கொலைக்களம்! உலககே அதுதானே!! சாவது, சாகடிக்கப்படுவது என்பதை உலகிலே விநாடி தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளல்லவா! காட்டிலும், நாட்டிலும், குருவிக் கூட்டிலும், குகையிலும், புற்றிலும், கடலிலும், விண்ணிலும், மண்ணெங்கும் கொலை நடந்து கொண்டே இருக்கிறது. பாபம், புண்ணியம் என்ற மொழி பேசி மன்னனை ஏசிடத் துணிந்தீரே, கொலை நடவாத இடம் எது? யோகிகளின் பர்ணசாலைகளிலே, பக்குவமாக வாட்டி தேனில் தொட்டுத் தின்னப்படும் மானிறைச்சி, புண்ணியத் துண்டுகளா? பசுங்கன்றின் இறைச்சியைப் பதம் பார்க்கும் முனி சிரேஷ்டர்கள் பாப பாயாசத்தைப் பருகினவர்களன்றோ! எமக்குத் தெரியும் எது முறை என்று! உமது கற்பனை உலகில் நாங்கள் குடி ஏறிடோம். கட்டும் உமது கடையை. இல்லையேல் நடவும் மன்னரிடம். முடியுடன் விளையாடுகிறீர்; தெரிந்தால் பிடி சாம்பலாக்கப்படுவீர்! கெடுமதி கொண்டு, கலிங்கனின் கைக்கூலியைத் தின்று, கலக புத்தியைப் புகுத்த வந்தீர். போர்க்குண மக்களிடம் பூனைப்பேச்சு பேசுகிறீர்" என்று கூட்டத்திலே ஒருவன் கொதித்துக் கூறினான். ஆரியன், "ஆத்திரம் விடுக! சந்தேகம் கொள்ளாதீர். நான் சாத்திரத்தை ஓதினேன். வேறில்லை. களத்திலே நடப்பதை நீங்கள் ஆதரிப்பதானால் நான் குறுக்கிடப்போவதில்லை" என்று கூறினான் விபரீதம் விளையாதபடி இருக்க. மக்கள், "வந்தான் வழிக்கு" என்று கூறிக் கைகொட்டி நகைத்தவர் பின்னர் 'ஓய் ஏதோ பேய் என்று சொன்னீரே, அதை உடனே களத்துக்கு அனுப்பும், நல்ல விருந்து கிடைக்கும்" என்று கேலி செய்தனர்.

களத்திலே, சோழனின் படைவீரர்கள், விழியினின்று கனலையும், உடலிலிருந்து குருதியையும் சொரிந்து, வெட வெடன வீரச் சிரிப்பு சிரித்துத் தமது நகை, நடை, இடி, பிடியால், கரிகள் திகைக்கும்படி காட்சியளித்தனர். மீனவர் மிரண்டதும், சேரர் மருண்டதும், விழிஞர் விரண்டதும்,