104
மா. இராசமாணிக்கனார்
மலர்கள் நிறைந்த பூஞ்சோலையை அடுத்துப் பளிங்குபோல் தெளிந்த நீர் நிறைந்த கயங்கள் இடம் பெறவும், மலர்கள் நிறைந்த நீர்த்துறைகளை அடுத்து, நுண் மணலை அரித்துக்கொண்டு அருவிகள் ஒழுகவும், 'இத்தகைய இளவேனிற் பருவத்தில் நீ உன் காதலனைப் பிரியவிட்டனையே' எனக்கூறாமல் கூறி எள்ளி நகைக்கும் குயிலின் குரல் கேட்டு வருந்தும் நெஞ்சோடு, 'நம்மைப் பிரிந்து மறந்து வாழ்கின்றனரே' என அவரிடம் நீ வெறுப்புக் கொள்ளாதே!
'காதலரிடம் கடுஞ்சினம் கொள்ளாதே' என அறிவுரை கூறும் தோழி! காதலர் பிரியக் கருதி விட்டனரே என்ற கலக்கத்தால், கண்களில், தடுத்து நிறுத்த நினைக்கவும் நிற்காது நீர் பெருக, அவரை ஆரத்தழுவிப் போக விடை அளித்த அன்று, அவர் வாக்களித்த காலம், வண்ணத்தால் வனப்பு மிக்க வண்டுகள் ஓயாது ஒலித்து, வைகைக் கரைக்கண் நீண்டு உயர்ந்த மணல் மேட்டில் அருவிநீர் பெற்று வளர்ந்த முல்லையின் மணம்மிக்க மலரில் தேன் குடிக்கும் வேனிற்காலம் அல்லவோ?
'வினை வெற்றிபெறுமாக' என வாழ்த்தி விடை கொடுத்த அன்று, அவர் வாக்களித்த காலம், மனம் விரும்பும் காதலரைப் புணர்ந்து மகிழும் வாய்ப்பினைப் பெற்றவர், ஆற்றிடைச் சென்று ஆங்கு நிகழும் காமவேள் விழாவில் கலந்துகொண்டு களிக்கும் வேனிற் காலம் அல்லவோ?
'கணவர் பிரிந்து போய் விட்டால், இருந்து உயிர் வாழ்வேமோ, இறந்து அழிவேமோ' என எண்ணாதன வெல்லாம் எண்ணி எண்ணி நடுங்கும் நெஞ்சினைப் பெற்ற நாம், வருந்தி வழிவிட்ட அன்று, அவர் வாக்களித்த காலம், உலகில் வாழும் ஒவ்வொருவர் வாயாலும் வாயாரப் புகழப்பெறும். நெடிய மாடங்கள் மலிந்த மதுரை மாநகரத்து மக்கள், அறிவால் நிறைந்த ஆன்றோர்கள், தாம் ஆக்கிய பாக்களின் பொருள் நயத்தைத் தாமே எடுத்து இயம்ப, அவர் புதிய புதியவாக எடுத்து இயம்பும் அச்சொற் பொருள் இன்பத்தை நுகரும் வேனிற் காலம் அல்லவோ?
- எனப் பலப்பல கூறி, அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சழியும் உன் காதல் நோய் தீர்ந்து, சற்றே இளைப்பாறும்படி, பறவை போல் பறந்தோடும் ஓட்டமும், அழியா