கலித்தொகை - பாலைக் கலி
107
மலர்களையும் ஆராய்ந்து, அம் மகளிரைத் தம்மிடம் தனித்தனியே அழைப்பது போல், வரிசை வரிசையாக மலர்ந்து காட்டவும், கரிய குயில் கூவவும், பெரிய நீர்த்துறை அழகு பெறவும், இளவேனிற் பருவத்தில் வேனில் விழாக்கொண்டாடற்குரிய சிறந்த காலமும் வந்து விட்டது! ஆனால், நம் காதலர் மட்டும் வந்திலர்!
அவர் வராமையால் வந்த வருத்த மிகுதியால் என் நெற்றியில் மெல்லப் படரத்தொடங்கிய பசலை, சிறிது சிறிதாகப் படர்ந்து படர்ந்து இறுதியில் முழுதும் படர்ந்தே விட்டது; தளரத் தொடங்கிய என் தோள்கள் சிறிது சிறிதாகத் தளர்ந்து தளர்ந்து: இறுதியில் முழுதும் தளர்ந்தே போயின!
என் கண்கள், அருவிகள் நீர் தெளிந்து ஒழுகும் வேனிற் காலம் வந்து விட்டது எனக்கண்டு, கொதிக்கும் நீரை ஓயாது சொரியத் தொடங்கிவிட்டன!
மலையிடையிட்ட வழிகளைக் கடந்து சென்ற காதலர் வருகையை ஆர்வத்தோடு எதிர்நோக்கி எதிர்நோக்கி என் நெஞ்சு ஏமாற்ற மடைந்தமையால் மார்பு நெருப்பெனக் கொதிக்கத் தொடங்கிவிட்டது!
'தோழி! காதலர் நம்மீது கொண்ட காதலைக் கைவிட்டனரோ? அல்லது காதல் உணர்வோடு இருந்தும் தன் வருகையையுணர்த்த வல்ல ஒரு தூதை அனுப்ப மறந்து விட்டனரோ? வந்து அவர் காட்டும் காதல் இன்பத்தை, அதுகாறும் வருந்தி வாழ்ந்திருந்து காணக்கொடுத்து வைப்போமோ? நம்மை விட்டுப்பிரிந்தவர் போன இடத்திலேயே தங்கி விடுவாரோ? ஏதும் புரியவில்லையே!
'வெட்டி, வாரி முடித்த கூந்தலை உடையவளே! நம்மை மணந்த காதலர் பிரிந்து போய்த் தொலைநாடுகளில் வாழ்வது உலகியலுக்கும் பொருந்தும் என்ப. அதனால், அவர் வருவதற்கு முன்பே, அவர் குறித்த நாள் வந்து வருந்தி உன் அழகை அழித்தலும் நிகழ்ந்து விடும் என்ற அச்சத்தால் என் நெஞ்சு, வேள்விப் புகைபோல், வெப்பம் மிக்க நெடுமூச்சுக் கொள்ளா-