குறிஞ்சித் திணை
மலையும், மலையைச் சேர்ந்த நிலமும் குறிஞ்சி நிலம் என அழைக்கப்பெறும். அந்நிலத்து மக்கள், கானவர், வேட்டுவர், குறவர் எனவும், மக்கள் தலைவன் வெற்பன், சிலம்பன், பொருப்பன் எனவும் அழைக்கப்பெறுவர். தேன், தினை, காய், கனி, கிழங்கு இவையே உணவுப் பொருள்கள். வேட்டை ஆடல், தினைகாத்தல் தொழில்களாம். ஓர் ஆண் மகன், ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டு கூடுதலே குறிஞ்சி நில ஒழுக்கமாம். காண்பது முதல், மணம் செய்து கொள்வதுவரை நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இதில் அடங்கும்.
பாடிய புலவர்
கபிலர்
குறிஞ்சிக் கலியைப் பாடியவர் கபிலர்; பெரும்புலவர் வரிசையில் வைத்துப் பாராட்டத்தக்கவர். இவர் அந்தணர்; பாரி என்ற பெரிய கொடைவள்ளலின் உயிரொத்த நண்பர். அவன் இறக்கும் வரை அவனுக்குத் துணையாய் இருந்து, அவன் இறந்த பிறகு, அவன் மகளிர்க்கு மணம் புரிய அரும்பாடு பட்டவர். இறுதியில், நண்பனைப் பிரிய நேர்ந்த துயர்மிகுதியால் வடக்கிருந்து உயிர்துறந்தவர். மலையமான் திருமுடிக்காரி, வையாவிக் கோப்பெரும்பேகன், விச்சிக்கோ, இருங்கோவேள், கடுங்கோவாழியாதன் முதலிய பேரரசர்களையும் பாடிப் பாராட்டியுள்ளார். இவர் பாடிய பாக்கள் 275. நற்றிணையில் 20; குறுந்தொகையில் 29; ஐங்குறுநூற்றில் 100; பதிற்றுப்பத்தில் 10; கலித்தொகையில் 29; அகநானூற்றில் 18; புறநானூற்றில் 28; பத்துப்பாட்டில் 1; இன்னாநாற்பதில் 40.