22
மா. இராசமாணிக்கனார்
'ஆக்கல், அருளல், அழித்தல் ஆகிய பல்வேறு தொழில்கள் நிகழ்வதற்குக் காரணமாகிய பறைகள் பல ஒலிக்க, உலக உயிர்கள் ஒன்றுபடுதற்கு இடமாகிய பல்வேறு வடிவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு கைகொட்டி ஆடும் கொடு கொட்டி என்ற கூத்தை ஆடி உலகை அழிக்கும் ஊழிக் காலத்தில், இருபக்கமும் உயர்ந்து அகன்ற அல்குலும், கொடி போலும் இடையும் உடைய அருட் சக்தியாகிய உமையம்மையார், உன் அழிவுத் தொழிலுக்குத் துணையாய், உன் ஆட்டத்திற்கு ஏற்ற சீர் எனும் தாளத்தின் முற்பகுதியைத் தருவாளோ? தரமாட்டாள்.'
'பெரிய போர் பலவற்றை வென்று, அவ்வெற்றிச் செருக்கால் உன்னால் அழிந்தவரின் உடலைச் சுட்டெரித்த வெண்சாம்பலைப் பூசிக்கொண்டு, பாண்டரங்கம் எனும் கூத்தை ஆடும் பொழுது, மூங்கில் போலும் அழகும், அணை போலும் மென்மையும் வாய்ந்த தோளும், வண்டுகள் மொய்க்கும் மலர்க் கூந்தலும் உடைய உமையம்மையார், உன் அழிவாட்டத்திற்குத் துணையாய் நின்று தாளத்தின் இடைநிலை ஆகிய தூக்கைத் தருவாளோ? தரமாட்டாள்.'
'கொல்லும் புலித்தோல் ஆடையைக் கட்டிக்கொண்டு கொன்றை மாலை தோளில் புரள, இறந்தவர்களின் தலை ஓட்டைக் கையில் ஏந்தி, காபாலம் எனும் ஆட்டத்தை ஆடும்பொழுது, முல்லை அரும்புகளை ஒத்த பற்களுக்கு அணி செய்யும் முறுவலையுடைய உமையம்மையார், உன் அழிவுத் தொழிலுக்குத் துணையாய் நின்று தாளத்தின் இறுதி நிலையாகிய பாணியைத் தருவாளோ? தரமாட்டாள் என்று கூறுமாறு, அழிக்கும் தொழிலை மேற்கொண்ட அன்று, பாணி, தூக்கு, சீர் என்ற தாளவரிசைகள் கெடாதபடி, மாட்சிமிக்க அணிகள் அணிந்த அரிவை ஆகிய உமையம்மையார் காப்பாற்ற, ஆடி அழிவுத் தொழில் புரிந்து விட்டு, இன்று, அன்புள்ளம் வாய்க்கப் பெறாத இழிவுடைப் பொருளாகிய என் பொருட்டு, அருள் உருவம் கொண்டு வந்து என்னிடத்து அன்பு கொண்டாய். உன் அருட்பெருங் கருணையை என்ன என்று சொல்வேன்!’
தேறு-தெளிந்த. கூளி-பேய். செல்லும்போர், கூளிப்போர் எனக் கொண்டு கூட்டுக. கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம்-கூத்து வகைகள்; சீர், தூக்கு, பாணி-தாளவகைகள். மதுகை-வெற்றி. அரற்றும்-ஒலிக்கும். உழுவை-புலி. கவல்-தோள். வாணம்-அன்பு.