உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மா. இராசமாணிக்கனார்


எந்நாளோ நெடுந்தகாய்! நீசெல்வது!
அந்நாள்கொண்டு இறக்கும் இவள் அரும்பெறல் உயிரே?

"அன்ப! அழகிய பெரிய காதுகளையும், பருத்த கால்களையும் உடைய மதம் பட்டு அறிவு மயங்கிய யானைக் கூட்டத்தோடு, வேறு பல வனவிலங்குக் கூட்டங்களும், வழிப்பறிகாரரும் தத்தம் மனம் போனபடியெல்லாம் அலைந்து திரிந்தமையால், புதர்களெல்லாம் அழிந்து, ஆங்குப் புது வழி உண்டாக, பழைய வழிகள் மறைந்து போன, கடப்பதற்கு அரிய காட்டைக் கடந்து சென்று பொருளீட்டுவதே உன் கருத்தாயின், நீண்ட பெரிய கடலில், தாம் ஏறிச் சென்ற கலம் புயல் காற்றில் அகப்பட்டுக் கொள்ளின் அக்கலம் ஏறிச்சென்று பொருளீட்டக் கருதிய மக்கள். தம் முயற்சி கெடத் தாமும் அழிய நேருமோ என நெஞ்சழிவதல்லது வேறு செய்வதறியாது கிடந்து வருந்துவது போல் நாங்களும் வருந்தி வாளாகிடப்பதல்லது, எம்மோடு காதலாகிய கழிபெரும் தொடர்புகொண்ட உமக்குப் பலவும் கூறி உம்மைத் தடை செய்வது எவ்வாறு இயலும்? இயலாது! நீ ஈட்டி வரும் செல்வத்தைக் காட்டிலும் நாங்கள் சிறந்தவர் என உன் உள்ளம் உண்மையில் நினைக்குமாயின், செல்லும் உம்மை, நாளும் கோளுமே நல்லன அல்லனவாகி நின்று தடை செய்தல் வேண்டும்.

'உன்னை அடையப் பெற்றமையால், அன்ப! கல் எனும் பேரொலி எழ, பல்வகைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்க, திருவிழா நிகழும் இடம் போல் பேரழகு பெற்று விளங்கிய உன் மனைவி, இன்று உன்னைப் பிரிய நேர்வதால், விழா ஒழிந்த அவ்விடம் அழகிழந்து தோன்றுவது போல், தனிமைத் துயர்கொண்டு வாழ்வாளோ? வாழமாட்டாள்!'

'நாடாளும் அரசர், பின்னர்த் தாம் கெட்டழிவர் என்பதை அறியாதே அழிவு பல செய்ய, அவரால் அழிந்த அந்நாட்டு மக்கள்போல், தன் அழகு முகம் அழிய ஆற்றொணாத் துயர்கொண்டு அடங்கி வாழ்வாளோ? வாழமாட்டாள்!'

'தாமரைக் குளத்தில் மலர்ந்த ஒரு மலர், நீரிலிருந்து பறித்து எடுத்து வெளியே எறியப்பட்டால், உடனே வாடிவிடாது; ஓர் இரவு வரை வாடாதிருத்தல் அம்மலருக்கு இயலும்! ஆனால், உன் மனைவி உன்னைப் பிரிய நேர்ந்தால், அவ்வாறு வாழமாட்டாள்; நீ பிரிந்த அப்போதே அழிந்து விடுவாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/37&oldid=1692312" இலிருந்து மீள்விக்கப்பட்டது