கலித்தொகை - பாலைக் கலி
39
கைபுனை வல்வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வுறு மண்டிலம் மையாப்பதுபோல்
மையில் வாள்முகம் பசப்பு ஊரும்மே,
நீயே, வினைமாண், காழகம் வீங்கக் கட்டிப்
புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே;
10
இவட்கே, சுனைமாண் நீலம் கார்எதிர்பவைபோல்
இனைநோக்கு உண்கண் நீர்நில் லாவே;
நீயே, புலம்பில் உள்ளமொடு பொருள்வயின் செலீஇய
வலம்படு திகிரி வாய்நீ வுதியே;
இவட்கே, அலங்குஇதழ்க் கோடல்வீ உகுபவைபோல்,
15
இலங்குஏர் எல்வளை இறை ஊரும்மே;
எனநின்,
செல்நவை அரவத்தும் இனையவள், நீநீப்பின்
தன்நலம் கடைகொளப் படுதலின், மற்றுஇவள்
இன்உயிர் தருதலும் ஆற்றுமோ,
20
முன்னிய தேஏத்து முயன்றுசெய் பொருளே?"
வேனில் பருவத்து வெம்மையால் வருந்தி உடல் தளர்ந்து ஓய்ந்த களிறுகள், மழை அற்றுப்போன அப்பாலைக் காட்டில், தொலைவில் நின்று நோக்குவார்க்கு நீர்நிலைபோல் தோன்றும் கானல்நீரை, நீர் என்று கருதி ஓடி அலையும் காட்டு வழியைக் கடந்து செல்லக் கருதியுள்ளாய் என்று கேட்டேன்; அது உண்மையாயின் அன்பரே! உம்மை ஒன்று கேட்கலாமோ?
நீ எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்கக் கருதி, வெளிநாடு செல்லத் துணிந்து, அதற்குத் துணைபுரியும், உன் கையால் நீ வளைத்துச் செய்த வில்லின் நாண், உறுதியாக உளதா என்பதை அறிய அதைத் தடவி நின்றாய்; ஆனால், அதைக் கண்டு கொண்ட உன் மனைவிக்கு மறுவற ஒளிவீசும் மதியின் மேல் மேகம் பரவுவது போல், மாசிலா மதிபோல் ஒளிவீசும் அவள் முகத்தில் பசலை படரத் தொடங்கி விட்டது.
நீ, சிறந்த கைத்தொழில் வளம் அமையப் பெற்ற கச்சையை இடையில் இறுகக் கட்டிக்கொண்டு, பூவும் சாந்தும் பூசிச் சிறந்த அம்புகளுள் ஏற்ற அம்புகளை ஆராயத் தொடங்குகின்றாய்; ஆனால், அதைக் கண்டுகொண்ட உன் மனைவிக்கு, சுனையில் மலர்ந்த இரு கருநீலமலர்கள் மழைநீர் ஏற்றுக்காட்சி அளிப்ப போல் அகத்துயரைப் புறத்தே காட்டும் பார்வை அமைந்த அவள் கண்களில், நீர் நிற்கமாட்டாது வடியத் தொடங்கி விட்டது.