48
மா. இராசமாணிக்கனார்
- எனப் பலப்பல கூறி, செய்து சூடிய சிறந்த அணிகளையுடையாய்! 'கடமையை நினைந்து இவளைக் கைவிட்டுச் சென்றால் இவள் உயிர் இவளை விட்டுப் பிரிந்து விடும்' என்று உன் இயல்பை எடுத்துக் கூறவே, ஒளிவீசும் நீண்ட வேலைக் கையில் ஏந்திக் காட்டைக் கடக்கத் துணிந்திருந்த நம் காதலர் தம் கருத்தை உடனே கைவிட்டு விட்டார்; ஆகவே, பெண்ணே, கவலையால் உடல் மெலிய, கழன்று போன கைவளைகள் கழலாது இறுகச் செறியும் வண்ணம், உன் உடல் மீண்டும் பருக்குமாறு மகிழ்ச்சியில் திளைப்பாயாக!
சினை-கிளை. இகந்து-வரம்புமீறி. இசை-புகழ். தெறுதல்-காய்தல். அலவுற்று-வருந்தி. வினைவர்-அரசியல் அலுவலர். கோல் கோடியவன்-கொடுங்கோலன். இறத்தி-போவாய். உடைபு நெஞ்சு உக-நெஞ்சழிந்து கெட்டுப் போக. ஒளி ஓடற்பாள்-அழகு கெடுவாள். சேக்கை-படுக்கை. புடை பெயர்தல்-சிறிதே விலகல். இனைபவள்-வருந்துபவள். பனிய கண்-நீர் நிறைந்த கண்கள். படல் ஒல்லா-உறக்கம் கொள்ளா. படர்-துன்பம். கூர்கிற்பாள்-மிகுவள். துனி-பிரிவு. ஈரம்-அன்பு. அவலம்-துன்பம்.
10. பல்லியும் இசைத்தன!
மனைவியினிடம் குறையாத காதலுடைய ஓர் இளைஞன் பொருளீட்டி வர வெளிநாடு போயிருந்தான்; போகும் முன், 'காட்டில் காதலை நினைவூட்டும் நிகழ்ச்சிகளே நிறைந்திருக்கும்' எனக் கூறியிருந்தான், அவன் போன பிறகு அவன் தன்பால் கொண்டிருந்த காதலும், அவன் கூறிய காட்டுக் காட்சிகளும் நினைவிற்கு வரவே, அவன் மனைவி, 'அக்காதற் காட்சிகளைக் கண்டு, காதல் உணர்வுகொண்டு எடுத்துச் சென்ற வினையை முடிக்காமலே வந்து விடுவனோ? அவ்வாறு வறிதே வந்து விட்டால் அவனுக்கும் தனக்கும் அது பழியாகுமே' என்றெல்லாம் எண்ணி அஞ்சினாள்; ஆனால், வீட்டில் காணும் நன்னிமித்தங்கள், 'அவ்வாறு நிகழாது; போனவன் பொருளீட்டிக்கொண்டே வருவான்' என்பதைக் கூறாமல் கூறின; அதனால் அவள் ஆறுதல் அடைந்தாள். அவள், தன் மனத்து நிகழ்ந்த மாற்றத்தையும், தெளிவையும் தோழிபால் கூறியது இது:
“அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகைவென்று, பேணாரைத் தெறுதலும்,