உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மா. இராசமாணிக்கனார்


வளம்மிக்க நிலங்கள் ஈரம் புலர்ந்து போகும்படி, ஞாயிறு, கதிர்களைக் கக்குவதால், தணியாக் கொடுமையுடைய கோடை காலத்திலும், குளிர்ந்த நிலைமையை விரும்பிப் பெருந்திரளாய் வந்தடையும், யானைக் கூட்டத்தையும் தாங்கும் சிறப்பு உடையதும், மாணிக்க மணிகளால் விளக்கம் பெறுவதுமாகிய சிறந்த மலையும், வெப்பத்தால் பிளந்து வெடிபடவும், தெளிந்த சுனைகள் எல்லாம் புலர்ந்து புழுதி படவும், வெப்பத்தை வாரிவீசும் கொடுமையுடையது காட்டுவழி.

'கிளிமொழி போன்ற; கேட்க இனிக்கும் மொழியினை உடையாய்! நீங்காது நிலைபெற்ற நெருப்பைக் கொண்ட அக்காடு, மழைத்துளியைக் கண்டறியாது. அது, உன் கால் இட்டு நடத்தற்கு எளிமை உடையதல்லவே.' என்று கூறும் தலைவ! இன்ன இடத்தில் இவ்வளவு காலம் நிற்கும் இயல்புடையது என வரம்புகட்டிக் கூறமுடியாத காற்றைப் போல், நிலையற்றது என் வாழ்நாள். அவ்வாழ்நாளையும், உன்மார்பிற் கிடந்து இன்புற, நீ அளிக்கும் அருளை அடிப்படையாகக் கொண்டுள்ளேன்; அத்தகையேன், உன்னைப் பிரிய விட்டு இருந்து நெஞ்சழிவனோ? மாட்டேன்; நிச்சயமாக இறந்து விடுவேன்.

'தமக்கு இடையே ஊறுகின்ற நீர், அமிழ்து போல் இனிக்கும் இயல்புடையது எனப், பாராட்டத்தக்க உமிழ்நீரைச் சுரக்கும் பற்களை உடையவளே! என்னோடு அக்காட்டு வழியில் வந்து, தண்ணீர் கேட்டால், அவ்வழியில் தண்ணீர் இல்லை' எனக் கூறி, அறம் உரைத்து என்னை விட்டுச் செல்ல விரும்புகின்றவரே! கழித்துவிடப்பட்ட ஆற்றுநீரை மீளவும் பெறமுடியாது. அது போல், கழிந்த இளமையும், கைகூடப் பெறாது. நிலையாத அந்த இளமையை, உன் நெஞ்சின் இடமாகத் தோன்றிப் 'பிரியேன், பிரியின் உயிர்தரியேன்' எனச் சூளுரைத்துத் தெளிவித்த அவ்வியல்பாகவே கருதியுள்ளேன்; ஆகவே அவ்வுறுதி உரை அழியின், என் இளமையும் அழிந்து விடும்; ஆகவே, உன்னைப் போகவிட்டு மனந்தடுமாறி மாளாத் துயர்கொள்வனோ? மாட்டேன்; மாண்டு போவேன்!

'மாண்புமிக்க மலைமூங்கிலை வென்ற தோளழகுடையவளே! நீ அக்காட்டுவழியில் வந்தால், உன் தளர்ச்சியைப் போக்கித் தாங்கவல்ல மாட்சி மிக்க மரம் ஆங்கு இல்லையே எனக்கூறி என்னைக் கைவிட்டுப் போகக் கருதுகின்றரே! நீ பிரிந்தால், நீண்ட நிழலடியில் துளிர்த்த தளிர், நிறம் இழந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/71&oldid=1737237" இலிருந்து மீள்விக்கப்பட்டது