பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமிதசாகரர்

106

அமிலங்கள்

நார்க் கற்றாழை முதலியவை இதைச் சேர்ந்தவை. யூகாரிஸ் லில்லி, பான்கிரேஷியம், செபிராந்தஸ், நார்சிஸ்ஸஸ் முதலிய பல பூச்செடிகளும் இந்தக் குடும்பத்தினவே. இதில் 80க்கு மேற்பட்ட சாதிகளும் 1000க்கு மேற்பட்ட இனங்களும் உண்டு. இவை பெரும்பாலும் சிறு பூண்டுகள்; நார் போன்ற சிம்பு வேருடையவை; நிலத்தின்கீழே பூண்டு, கந்தம், கிழங்கு, மட்டத்தண்டுக் கிழங்கு எனத் தண்டு பல வகையாக இருக்கும். இந்தத் தரைக்கீழ்த் தண்டுகளின் உதவியால் இச்செடிகள் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கும். இலை அடித்தண்டிலை. சிலவற்றில் ஒரு குறுகிய தண்டின் முனையில் அடர்ந்திருக்கும்; ஒருபோகு நரம்புள்ளது. பூக்கள் சில சேர்ந்து குடைமஞ்சரியாக இருக்கலாம். சில செடிகளில் ஒரே பூ உண்டாகும். சிலவற்றில் பல பூக்கள் கலப்பு மஞ்சரியாக இருக்கும்; சாதாரணமாக இருபாலின; ஒழுங்கான அமைப்புள்ளவை ; சிலவற்றில் சற்று ஒருதளச்சமமாக இருக்கலாம். இதழ்கள் சூலகத்துக்குமேல் வளர்வன. ஆறு பிரிவுள்ளவை. சிலவற்றில் அவற்றின் வாயில் உப மகுடம் இருக்கும். மகரந்த கேசரங்கள் ஆறு சாதாரணமாக இதழ்களின் அடியில் ஒட்டியிருக்கும். சூலகம் உள்ளடங்கும் சூற்பையுள்ளது. இணைத்த சூலறை. மூன்று அறைகளுள்ளது. சூல்கள் பல, சூல் தண்டின்மேல் சூல்முடி ஒன்றாக இருக்கும்; அல்லது மூன்றாகப் பிரிந்திருக்கும். கனி சாதாரணமாக அறைவெடிக்கும் உலர்கனி, சிலவற்றில் சதைக்கனி யுண்டு. விதைகள் சில அல்லது பல. கருவைச் சுற்றி முளைசூழ்தசை யுண்டு. (மேற் குறித்த செடிகளைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு.)

அமிதசாகரர் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களின் ஆசிரியர்; கி. பி. 12 ஆம் நூற்றாண்டினர் ; வேளாளர்; தீபங் குடியில் இருந்த சமணர்; சமண சங்கப் பிரிவான அருங் கலான்வயம் என்னும் குழுவினைச் சார்ந்தவர்.

அமிர்த கவிராயர் (கி.பி. 1637-72) பாண்டி நாட்டிலே பொன்னாங்கால் என்னும் ஊரிலே தோன்றியவர்; இராமநாதபுர மன்னர் இரகுநாத சேதுபதி அவைக்களப் புலவராயிருந்தவர். ஒரு நாள் சேதுபதியவர்கள் அகப்பொருள் துறை ஒவ்வொன்றிற்கும் பல பாடல்கள் பாட இயலுமோ எனப் புலவர்கள் பலரையும் வினவினர் எனவும், பிற புலவர்கள் ஒன்றுங் கூறாமல் இருக்க, அமிர்த கவிராயர் மட்டும், “நான் நூறு பாடுவேன்“ என்றார் எனவும், பொறாமை கொண்ட புலவர்கள், “இவர் ஒவ்வொரு துறைக்கும் நானூறு பாடுவேன்“ என்கிறார் என வுரைத்தனரெனவும், இவர் அவ்வாறே நாணிக்கண் புதைத்தல் என்னும் துறைக்கு நானூறு பாடி, ஒரு துறைக்கோவை என்னும் நூலாகத் தந்தார் எனவும் கூறுவர். இந்நூல் வெளியாகியுள்ளது.

அமிர்த கவிராயர் தொண்டைமண்டலத்துப் பாலூரில் இருந்தவர் ; கோகுல சதகம் பாடியவர்.

அமிர்தசரஸ் பஞ்சாபில் இரண்டாவது பெரிய நகரம். கிழக்குப் பஞ்சாபிலுள்ளது; சீக்கியர்களுடைய பொற்கோயிலுள்ள புண்ணியத் தலம்; ஆறாயிரம் புரோகிதர்கள் உடையது; 1919-ல் சத்தியாக்கிரக இயக்கம் தோன்றிய காலத்து, ஜெனரல் டயர் நிரபராதிகளைச் சுட்ட ஜாலியன் வாலாபாக் தோட்டம் உடையது; கைத்தொழிலும் வியாபாரமும் மிகுதியாக உடையது. முக்கியமான கைத்தொழில் துணி நெய்தலாகும். மக் : 3.25,747 (1951). இதே பெயர் கொண்ட மாவட்டத்தின் மக் : 13,67,040 (1951).

அமிர்தபஜார் வங்காளத்தில் ஜெஸ்ஸுர் மாவட்டத்திலுள்ள கிராமம். பழைய வங்காளி தினசரியான அமிர் தபஜார் பத்திரிகை இங்கிருந்து தொடங்கப்பட்டது.

அமிர்தலிங்க சுவாமிகள் திருவண்ணாமலை ஆதீனத்தவர் ; திருமயிலைப் புராணம் பாடியவர்.

அமிலங்கள் (Acids) : ரசாயனத்தில் அமிலம் என்பது உலோகத்தினால் பிரதியீடு செய்யத்தக்க ஹைடிரஜனைக்கொண்ட கூட்டு. இந்த மாற்றத்தினால் ஒரு ரசாயன உப்புத் தோன்றும். நீரிற் கரைத்தால் ஹைடிரஜன் அயான்களைத் தரும் பொருள் எனவும் இதை வரையறுப்பதுண்டு. சாதாரணமாக அமிலங்கள் புளிப்பான சுவையை யுடையவை. இவை காரங்களையும், பல உலோகங்களையும் கரைக்க வல்லவை. லிட்மசைப் போன்ற பல தாவர நிறப்பொருள்களை இவை நீலம் அல்லது ஊதா நிறத்திலிருந்து செந்நிறமாக மாற்றும்.

மதுவைப் புளிக்கவைத்துப் பெறப்படும் காடி என்ற அசிட்டிக அமிலம் பழங்காலத்திலிருந்தே அறியப்பட்டுள்ளது. நைட்ரிக அமிலத்தையும், கந்தக அமிலத்தையும் இந்திய நாட்டு ரசவாதிகள் அறிந்திருந்தனர். ராபர்ட் பாயில் என்ற ரசாயன அறிஞர் பல அமிலங்களை ஆராய்ந்து, அவற்றின் பொது இயல்புகளைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர்ப் பிரெஞ்சு அறிஞர் லவாய்சியர் எல்லாப் பொருள்களையும் அமிலங்கள், உப்பு மூலங்கள், உப்புக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். ஆக்சிஜனே அமிலங்களைத் தோற்றுவிக்கிறது என அவர் கருதினார். ஹைடிரஜன் சல்பைடு, ஹைடிரோகுளோரிக அமிலம் போன்ற பல கூட்டுக்களில் ஆக்சிஜன் இல்லாவிட்டாலும், அவை அமிலங்களின் இயல்புகள் கொண்டிருப்பது அறியப்பட்டபின், இக்கருத்துத் தவறானது என்பது தெளிவாகியது. அமிலங்களில் ஹைடிரஜனே முக்கியமான உறுப்பு என்னும் கருத்துத் தோன்றியது. 1838-ல் லீபிக் என்ற ஜெர்மானிய அறிஞர் கரிம அமிலங்களை ஆராய்ந்து, உலோகங்களால் பிரதியீடு செய்யத்தக்க ஹைடிரஜன் அணுக்களைக் கொண்ட கூட்டு என அமிலத்தை வரையறுத்தார். சில அமிலங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட ஹைடிரஜன் அணுக்களை இவ்வாறு பிரதியீடு செய்யலாம். இதனால் ஒரே அமிலம் ஓர் உலோகத்துடன் வினைப்பட்டு, ஒன்றிற்கு மேற்பட்ட உப்புக்களைத் தரக்கூடும். மின்பகுப்பு (த. க.) என்னும் விளைவை விளக்க அரானீயூஸ் வெளியிட்ட கொள்கையின்படி ஓர் அமிலத்தை நீரிற் கரைத்தால் அது அயான்களாகப் (த. க.) பிரிகிறது. இப்பிரிவை அடிப்படையாகக் கொண்டு அமிலங்களின் சிறப்பியல்புகளை விளக்க முடிகிறது. தற்கால அணு அமைப்புக் கொள்கையும் அரானீயூஸின் கருத்திற்கு ஆதரவு தருகிறது. ஓர் அமிலத்தை நீரிற் கரைத்த பின்னரே, அது தன் இயல்புகளை வெளிக்காட்டுகிறது. ஆகையால் ஹைடிரஜன் அயான் நீர் மூலக்கூற்றுடன் இணைந்து H30 என்னும் நேரயானாகி அமிலத்தின் பண்புகளைத் தோற்றுவிக்கிறது எனத் தற்கால ரசாயன அறிஞர் பலர் கருதுகிறார்கள்.

கரிம அமிலங்கள் : கரிம அமிலங்களிற் பெரும்பான்மையானவை COOH என்னும் கார்பாக்சிலிகத் தொகுதியைக் கொண்டிருக்கும். இவை அலிபாடிக அமிலங்கள் என்றும், அரோமாடிக அமிலங்கள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. கரிம அமிலங்கள் உப்பு மூலங்களுடன் வினைப்பட்டு உப்புக்களை அளிக்கும் ; ஆல்கஹால்களுடன் வினைப்பட்டு எஸ்-