பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலெக்சாந்தர்

222

அலெக்சாந்தர்

னர். பாரசீகப்பேரரசு முழுதும் அலெக்சாந்தர் வசமாயிற்று.

காடும் மலையும் பாலைவனமும் நாடும் கடந்து எதிரிகள் யாவரையும் வென்று ஆசியாவின் உள்நாடுகளுக்குச் சென்றான். முதலில் கீழ்த்திசையை நோக்கிப் பாக்டிரியாவிற்கும், பின்பு வடதிசையை நோக்கி ஆக்சஸ், ஜக் ஸார்ட்டிஸ் ஆறுகளைக் கடந்து துருக்கிஸ்தானத்திற்கும், இறுதியாகத் தெற்கே இந்தியாவிற்கும் போனான். சென்ற இடமெல்லாம் அவனுக்கு வெற்றி கிட்டிற்று. ஜீலம் நதிக்கரையில் புரு வம்ச மன்னனைத் தோற்கடித்தான். அவனைக் கிரேக்கர்கள் போரஸ் என்று அழைத்தனர். போரஸின் வீரத்தை மெச்சி அவன் நாட்டை அவன் கையிலேயே ஒப்படைத்தான். பின்னும் இந்தியாவிற்குள் செல்ல விரும்பிய அலெக்சாந்தரை அவன் படையினர் தடுத்து விட்டனர். அவர்கள் நாடு விட்டு வெகு நாளானதால் திரும்பிச்செல்ல ஆசை கொண்டனர். மிக்க வருத்தத்துடன் அலெக்சாந்தர் இசைந்தான்.

கப்பல்களைப் பாரசீக வளைகுடாவைச் சுற்றிச் செல்லும்படி படைத்தலைவர்களில் ஒருவனான நியார்க்கஸ் தலைமையில் அனுப்பிவிட்டு, அலெக்ஸாந்தர் படையுடன் கரைவழியாகப் பல பாலைவனங்களைக் கடந்து பாபிலோனை அடைந்தான். அங்கிருந்து அரேபியா, கார்த்தேஜ், இத்தாலி முதலிய நாடுகளைத் தாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது கி. மு.323-ல் நோய்வாய்ப்பட்டு இறந்தான்.

அலெக்சாந்தர் பெரு வீரன். அவன் காலத்திற்கு முன் எவரும் இவ்வளவு நாடுகளை வென்றதில்லை. ஆனால் இவன் வெறும் போர்வீரன் மட்டுமல்ல. ஐரோப்பாவையும் ஆசியாவையும் கிரேக்கப் பண்பாட்டால் ஒன்று சேர்த்து இணைக்க விரும்பினான். இந்த முற்போக்கான எண்ணத்தைக் கருதியே ஆசிய நாடுகளில் பற்பல நகரங்களை உண்டாக்கி, அங்குக் கிரேக்கர்களைத் தங்க வைத்தான். மேலும், கிரேக்கர்கள் பலருக்குப் பாரசீகப் பெண்களை மணஞ்செய்வித்தான். தானும் ஒரு பாரசீக இளவரசியை மணம் புரிந்தான். ஆனால் ஐரோப்பியரையும் ஆசியரையும் இணைத்து வைக்க இவன் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. ஏனெனில், கிரேக்கர்களுக்கு இனப் பற்று அளவுகடந்ததா யிருந்தது. ஆசியரோடு இணங்கும் தன்மை அவர்களிடம் காணப்பட வில்லை. அலெக்சாந்தர் கீழ்நாட்டு வழக்கங்களையும், ஆசிய மன்னர்களின் முறைகளையும் பின்பற்றியது கிரேக்கர்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிற்று. அவன் கருத்து நிறைவேறாது போயினும், அவன் உருவாக்கிய பேரரசு அவன் காலத்திற்குப்பிறகு சிதைந்து போயினும், அவன் இயற்றிய மாறுதல்களின் விளைவுகள் ஆசியாவில் பல நூற்றாண்டுகள் தென்பட்டு வந்தன. கே. க.

அலெக்சாந்தர் (யூகோஸ்லாவியா) (1888-1934) 1921-ல் செர்புகள், குரோவாட்டுகள், சுலோவீன்கள் ஆகியோருடைய நாடுகளின் அரசனானான். 1929க்குப் பிறகு இந்நாட்டுத் தொகுதி யூகோஸ்லாவியா என்னும் பெயர் பெற்றது. இம்மன்னன் நாட்டில் இருந்த அமைதிக் குறைவை நீக்க, 1929-ல் நாட்டின் பார்லிமென்டு அரசியலமைப்பை விலக்கிவிட்டுத் தானே சர்வாதிகாரியானான். இதனாலும் பயன் ஏற்படாமற் போகவே, 1931-ல் பார்லிமென்டு ஆட்சியை மறுபடியும் நிறுவினான். ஆயினும் பயங்கர இயக்கம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1934-ல் இவன் பிரெஞ்சு ஜனாதிபதியைப் பார்க்கவேண்டிப் பிரான் சிற்குப் போனபோது இவனைச் சில குரோவாட்டுப் பயங்கரவாதிகள் மார்சேல்ஸில் சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனுக்குப் பின் இவனது 11 வயது மகனான பீட்டர் அரசனானான்.

அலெக்சாந்தர் : ரஷ்யாவில் இப்பெயருடைய மன்னர்கள் மூவர்


அலெக்சாந்தர் I (1777-1825) I-ம் பாலின் மகன். 1801-ல் ரஷ்யப் பேரரசுப் பட்டம் எய்தினான். II-ம் காதரீனின் ஆட்சிக் காலத்தில் கற்றுக் கொண்ட அறிவுமுதற்கோட்பாடுகளும், ரூசோவின் கருத்துக்களும், பரம்பரையாக வந்த தனியாட்சிக் கொள்கைகளும் ஆகப் பலவகைக் கருத்துக்களைக் கொண்டவன் இவன். வட ஐரோப்பிய நாட்டவர்களுடைய படைதரித்த நடுநிலைமையை இவன் கைவிட்டான். ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நெப்போலியனோடு பொருது தோல்வியடைந்ததால் 1808-ல் அவன் பக்கம் சார்ந்தான். 1812ஆம் ஆண்டுப் போர்கள் இவனது ஏற்பாடுகளையும் எண்ணங்களையும் மாற்றிவிட்டன. ஐரோப்பாவில் அமைதி நிலைநிறுத்துவதையே முக்கியத் தொழிலாக இவன் கருதினான். வியன்னாவில் நெப்போலியனைக் கண்டதிலிருந்து ஐரோப்பிய நாடுகளை அப்பிரெஞ்சுப் பேரரசனுக்கு எதிராக ஐக்கியப்படுத்துவதில் முனைந்தான். இவன் ஆட்சியின் இறுதியாண்டுகளில் தன் தாராளக் கொள்கைகளைக் கைவிட்டான். உஸ்மானியப் பேரரசில் உள்ள கிறிஸ்தவத் திருச்சபையின் இரட்சகன் என்று தன்னைக் கூறிக்கொண்டான்.

அலெக்சாந்தர் II (1818-1881) I-ம் நிக்கலசின் மகன். 1855-ல் பட்டமெய்தினான். 1861-ல் அடிமைகளுக்கு விடுதலையளித்தான். இவன் கையாண்ட வெளிநாட்டுக் கொள்கையால் ரஷ்யாவின் மதிப்புப் பிறநாடுகளில் மிகுந்தது. இவன் 1881-ல் நிகிலிஸ்ட் என்னும் ரஷ்யத் தீவிரக் கட்சியினனாற் கொல்லப்பட்டான்.

அலெக்சாந்தர் III (1845-1894) II-ம் அலெக்சாந்தரின் மகன் ; 1881-ல் பட்டமெய்தினான். இவன் தன் தந்தையின் கொள்கைகளைப் பின்பற்றாது தனியாட்சியில் முனைந்தான்.

அலெக்சாந்தர் : ஸ்காட்லாந்தில் இப்பெயருடைய மன்னர்கள் மூவர் :

அலெக்சாந்தர் I (ஆ. கா. 1107-1124) மால்கம் கான்மோரின் நான்காம் மகன். தமையனான எட்கருக்குப்பின் 1107 ஜனவரியில் பட்டமெய்தினான். போர்த், கிளைடு கடலுள்வாய்களுக்கு வடபாலுள்ள ஸ்காட்லாந்தை ஆண்டான். இவன் காலத்தில் ஸ்காட்லாந்துத் திருச்சபை சுவாதீனமாக அமைக்கப்பட்டது. இவன் இங்கிலாந்து மன்னனான I-ம் ஹென்ரியின் மகள் செபிலை மணந்தான். இவனுக்கு மக்களில்லை. இவனைக் 'கொடூ ரன் 'என்று அழைப்பர்.

அலெக்சாந்தர் II (ஆ. கா. 1214-1249) இவன் வட ஸ்காட்லாந்திலிருந்த பிரபுக்களோடு போர் புரிந்தான். இவன் காலத்தில் இங்கிலாந்து மன்னனான ஜான் ஸ்காட்லாந்தின் மீது படையெடுத்து, எல்லைப்புறங்களை அழித்து நாசஞ் செய்தான் ; பிரெஞ்சு அரசனான லூயியைத் தன் தலைவனாக ஏற்றுக்கொண்டு ஜானை மேலும் பகைத்துக்கொண்டான். ஆயினும் 1217-ல் ஜானுடைய மகளான ஜோவானாவை இவன் மணந்துகொண்டபின் நிலைமை சிறிது மாறிற்று. III-ம் ஹென்ரியின் ஆட்சியில், 1244-ல், நியூகாசிலில் நடந்த ஒப்பந்தப்படி ஆங்கிலேய மன்னனுக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை என்று ஏற்றுக்கொண்டான்.