பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவர்த்த விதி

448

ஆவர்த்த விதி

குறு ஆவர்த்த அமைப்பிலும் சம வலுவெண்ணுள்ள பொருள்கள் ஒரே தொகுதியில் அமையும். இவற்றின் ரசாயன ஒப்புமையை இன்னும் தெளிவாக்க அவை ஒவ்வொன்றும் இரு துணைத் தொகுதிகளாகவும் பிரிக்கப்படுகின்றன. (எட்டாம் தொகுதியும் சுன்னத் தொகுதியும் இதற்கு விலக்குக்கள்). நெடு அட்டவணையில் முதன் மூன்று ஆவர்த்தங்களில் முறையே 2, 8, 8 தனிமங்கள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து 18. 18, 32 தனிமங்களுள்ள மூன்று நெடு ஆவர்த்தங்கள் உள்ளன. உரேனியத்துடன் முடியும் கடைசி ஆவர்த்தங்களில் ஆறே பொருள்கள் உள்ளன. குறு அமைப்பின் மூன்று நீண்ட ஆவர்த்தத்தில் ஆறே பொருள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் a, b என்ற இரு துணைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படும். வெவ்வேறு துணைத் தொகுதிகளிலுள்ள தனிமங்கள் ஒரே துணைத்தொகுதியிலுள்ளவற்றைப்போல் அவ்வளவு ஒத்திரா (உ.ம் K, Rb, Cs, Cu, Ag, Au). மெண்டலீபின் காலத்தில் சுன்னத் தொகுதித் தனிமங்கள் (சடவாயுக்கள்) தெரிந்திருக்கவில்லை. ஆகையால் அவருடைய முதல் அட்டவணையில் நெடு ஆவர்த்தங்களில் 17, 17, 31 பொருள்கள் அமைக்கப்பட்டன. குறு அமைப்பில் முதல் இரண்டு ஆவர்த்தங்கள் முறையே 10. 7 பொருள்களைக் கொண்ட தொடர்களாகவும், மூன்றாவது முறையே 24, 7 பொருள்களைக்கொண்ட தொடர்களாகவும் பிரிக்கப்பட்டன. முதலிரண்டு ஆவர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் எட்டாம் தொகுதியில் மிகவும் ஒத்த பண்புள்ள மூன்று தனிமங்கள் (Os, Ir, Pt) உள்ளன. மூன்றாவது ஆவர்த்தத்தில் இதைப்போன்ற மூன்று ஒத்த தனிமங்கள் எட்டாம் தொகுதியில் உள்ளன. இவை இருபத்துநான்கு தனிமங்களாலான முதல் தொடரின் முனையில் உள்ளன. இவற்றை மெண்டலீபு கடப்புத் தனிமங்கள் (Transitional elements) என அழைத்தார். லாந்தனத்திற்குப் பின் வரிசையாக வரும் பதினான்கு அருமண்களும் அத்துடன் இட்ரியத்தின் கீழ் மூன்றாம் தொகுதியில் அமையும். இவை அனைத்தும் இயல்புகளில் ஒத்தவை.

ஆவர்த்த அட்டவணையிலுள்ள முறை பிறழ்ச்சிகள் : அணுநிறையைப் பொறுத்தமட்டில் மெண்டலீபின் அட்டவணையில் இரு முறை பிறழ்ச்சிகள் இருந்தன. அணுநிறை 58.7 உள்ள நிக்கலுக்கு முன் 59 அணுநிறையுள்ள கோபால்டை அமைக்க வேண்டியதாயிற்று; 127 அணுநிறை கொண்ட அயோடினுக்கு முன் 128 அணுநிறையுள்ள டெலூரியத்தை அமைக்க வேண்டியதாயிற்று. ஒத்த பண்புகளுள்ள பொருள்களை ஒரே தொகுதியில் அமைக்க மெண்டலீபு அணுநிறை வரிசைக்கு எதிராக இவற்றை அமைத்தார். ஏனென்றால் பிரோமினையும் குளோரினையும் அயோடின் ஒத்துள்ளது. செலினியத்தையும் கந்தகத்தையும் டெலூரியம் ஒத்துள்ளது. சடவாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் அவை தனித் தொகுதியில் வைக்கப்பட்டன. இது சுன்னத் தொகுதி எனப்படும். ஏனெனில் இவையனைத்தும் மின்சார, ரசாயன சடத்துவ முள்ளவை. ஆகையால் வலிவான நேர்மின்னியலும் ஒருவலுவானதுமான கார உலோகத் தொகுதிக்கும் (தொகுதி-1) வலிவான எதிர்மின்னியலும், ஒரு வலுவானதுமான உப்பீனித் தொகுதிக்கும் (தொகுதி-8) இவை இணைப்பாக அமைந்தன. இவற்றையும் அட்டவணையில் சேர்க்கவே, 40 அணுநிறை உள்ள ஆர்கனுக்கு முன் 39 அணுநிறை உள்ள பொட்டாசியம் அமைந்து அட்டவணையின் மூன்றாம் முறை பிறழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஐந்தாம் தொகுதியிலுள்ள புரோட்டோ அக்டீனியத்தின் அணுநிறை (230) அண்மையிற் கண்டுபிடிக்கப்பட்டது. இது நான்காம் தொகுதியிலுள்ள தோரியத்தின் அணுநிறையை விடக் குறைவாக உள்ளதை அட்டவணையின் நான்காம் முறை பிறழ்ச்சி எனலாம். ஆனால் மோஸ்லியின் ஆராய்ச்சியால் அணுவெண் என்பதே அணுநிறையைவிட அடிப்படையான பண்பு என்னும் கருத்துத் தோன்றியது. அட்டவணையில் தனிமங்கள் அணு எண்ணை ஒட்டி வரிசைப்படுத்தப்பட்டன. இதனால் மேற்கூறிய முறை பிறழ்ச்சிகள் மறைந்தன. இதன் விளைவாக ஆவர்த்த விதியும் திருத்தப்பட்டது. விதியின் தற்கால வடிவம் 'ஒரு தனிமத்தின் இயல்புகள் அதன் அணுவெண்ணின் ஆவர்த்தச் சார்பாகும்' என்பது.

ஆகையால் தற்கால ஆவர்த்த அட்டவணைகளில் இந்த முறை பிறழ்ச்சிகளுக்கு இடமில்லை. இம் மாறுதல்களுக்குக் காரணம் சில தனிமங்களின் ஐஸோடோப்புக்கள் (த. க.) பல்வேறு விகிதங்களில் இருப்பதே எனத் தற்போது கருதப்படுகிறது. இவ் வட்டவணைகள் அனைத்திலும் ஒவ்வோர் ஆவர்த்தமும் ஒரு சடவாயுவில் முடிவதைக் காணலாம். இவ் வுண்மைகளைத் தற்கால அணு அமைப்புக் கொள்கை நன்கு விளக்குகிறது. பார்க்க: அணு வடிவங்கள்.

தாம்சன், போர் இவ் விருவரது அணுக்கொள்கையை ஒட்டிய ஆவர்த்த அட்டவணையொன்று சிறு மாறுதல்களுடன் அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது. அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்ட யுரேனியத்தைக் கடந்துள்ள தனிமங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை நெப்ட்யூனியம், புளுடோனியம், அமெரிகம், குயூரியம் என்பன. இவைகளும் அக்டீனியம், தோரியம், புரோடோ அக்டீனியம், யுரேனியம் என்பவைகளும் லாந்தனைடு அருமண்களை யொத்த அக்டினைடு தொடரைச் சேரும்.

தனிமங்களின் ஆவர்த்தத் தன்மை : ஆவர்த்த முறையால் தனிமங்களின் இயற்கைப் பாகுபாடு ஒன்று தோன்றியது. அணுவெண்ணுக்கும் தனிமங்களின் பௌதிக ரசாயன இயல்புகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் காட்டி, அவற்றின் ஆவர்த்தத் தன்மையையும் இது வெளிப்படுத்தியது. ஆவர்த்த அட்டவணையை ஆராயுங்கால் பொருள்களின் இயல்புகளில் சீரான மாறுதல்களையும், குறிப்பிட்ட சில தனிமங்களுக்குப்பின் ஒத்த பண்புள்ள தனிமங்கள் கிரமமாகத் தோன்றுவதையும் காண்கிறோம்.

பௌதிக இயல்புகள் : ஆவர்த்த அட்டவணையின் ஏழு தொகுதிகளிலும் அமையும் தனிமங்களின் இயல்புகளில் உள்ள ஒழுங்கு முக்கியமான பௌதிக இயல்பு ஒன்றிலிருந்து வெளியாகிறது. இப் பௌதிக இயல்பு அணுப்பருமன் என்பது. இது அணுநிறையைப் பொருளின் அடர்த்தியால் வகுப்பதாற் பெறப்படும். 1870-ல் லோதர் மெயர் பொருள்களின் அணுப் பருமனையும் அணுநிறையையும் ஒரு வரைப்படத்தில் குறித்து ஆராய்ந்தார். இது அணுப்பருமன் வரை எனப்படும். தற்காலத்தில் அணு நிறைக்குப் பதிலாக அணுவெண்ணைக்கொண்டு இது வரையப்படுகிறது. இவ்வரையைக் கொண்டும் மெண்டலீபின் பாகுபாடு எவ்வளவு சரியானது எனத் தெளிவாகும். வேறு பல பௌதிக இயல்புகளும் இத்தகைய ஆவர்த்தத் தன்மை கொண்டவை.

ரசாயன இயல்புகளும் மின்சார ரசாயன இயல்புகளும் : ஒரு தனிமத்தின் வலுவெண் என்பது அப்பொருளின் ஓர் அணுவுடன் கூடும் ஹைடிரஜன் அணுக்களின் எண்ணிக்கை அல்லது அதன் கூட்டுப் பொருளி-