பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

543

இத்தாலி

சிசிலியும் பைசான்டியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்தன. ஆனால் ராவெவ்னா 751-ல் லாம்பர்டு ஆட்சியின்கீழ் வந்தது. லாம்பர்டு அரசர்கள் பாவீயா என்னும் தலைநகரத்திலிருந்து இரும்பு முடிதாங்கி, இரண்டு நூற்றாண்டுகள் வட இத்தாலியில் ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் தாம் கைப்பற்றிய நிலங்களை மானியங்களாகத் தம் துணைவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். இவற்றில் முக்கியமானவை பிரியூலி, ஸ்பொலீடோ, பெனேவெண்டோ என்பவை. இவை பிற்காலத்தில் சுதந்திர நாடுகளாகி விட்டன. இதேபோல் பைசான்டியச் சக்கரவர்த்தியின் கீழிருந்த இத்தாலியும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தது. 8ஆம் நூற்றாண்டின் நேப்பிள்ஸ் ஒரு தனி நாடாயிற்று. ரோமும் போப்பின் தலைமையின்கீழ் ஒரு தனிக் குடியரசாயிற்று. லாம்பர்டுகள் ரோமைத் தாக்கினபோது மதத் தலைவரான போப்பே ரோமைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு ரோமின் முடிதரிக்காத அரசராக விளங்கிய முதல் போப் I-ம் கிரெகரி (590-603 ஆவர். இவர் ரோம் நகரில் அமைதியை நிலைநாட்டி மக்களுக்குத் தைரியத்தையளித்தார். கிரெகரிக்குப் பின்வந்த போப்புக்கள் பிரான்க் (Frank) அரசர்களின் உதவியை நாடவே, பெபினும் அவன் மகன் சார்லமேனும் இத்தாலிமீது படையெடுத்தார்கள். 754-ல் பெபின் ராவென்னாவைக் கைப்பற்றிப் போப்புக்களித்தான். 774-ல் சார்லமேன் பாவீயாவைக் கைப்பற்றி, லாம்பர்டு அரசாட்சியைக் குலைத்து, ரோமிலும் ராவென்னாவிலும் போப்பின் ஆட்சியை நிலைநாட்டினான். இவன் 800-ல் கிறிஸ்து மஸின்போது போப் III-ம் லியோவால், புனித ரோமானியச் சக்கரவர்த்தி என்னும் பட்டத்துடன் ரோமில் முடிசூட்டப்பட்டான். சார்லமேனுக்குப் பிறகு அவனுடைய சாம்ராச்சியம் சிகறுண்டு போயிற்று. இத்தாலியின் சுதந்திர அரசர்களும் படைமானியப் பிரபுக்களும் ஒருவரோடொருவர் சண்டையீட்டுக் கொண்டு இத்தாலியைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தினார்கள். அக்காலத்தில் (800-962) போப்புகள் பலங்குன்றியவர்களா யிருந்தார்கள். முகம்மதியர்கள் 877-ல் சிசிலியைக் கைப்பற்றித் தென் இத்தாலியிலும் பரவினார்கள். மாகியர்கள் வடக்கே படையெடுத்து நாட்டைப் பாழ்படுத்தினார்கள். 962-ல் ஜெர்மானிய அரசனான I-ம் ஆட்டோ, வட இத்தாலியைக் கைப்பற்றி, அமைதியை நிலைநாட்டி. ரோமில் 'புனித ரோமானியச் சக்கரவர்த்தி'யாக முடிசூட்டிக் கொண்டான். ஆட்டோவும் அவன் சந்ததியார்களும் தம்மை இத்தாலியின் சக்கரவர்த்திகள் என்று கூறிக்கொண்ட போதிலும் இவர்களால் தென் இத்தாலியைக் கைப்பற்ற இயலவில்லை.

11ஆம் நூற்றாண்டில் ராபர்ட் கீஸ்கார் (Robert Guiscard) தலைமையில் நார்மானியர்கள் முகம்மதியர்களிடமிருந்து சிசிலியையும் தென் இத்தாலியையும் கைப்பற்றினார்கள். இவர்கள் பாலெர்மாவைத் தலை நகராகக்கொண்டு அரசு செலுத்தி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் இறுதியில் போப், சக்கரவர்த்தி ஆகிய இருவருக்குள் யார் உயர்ந்தவர் என்பதைப்பற்றிய நீண்ட சச்சரவு தொடங்கிற்று. பிஷப்புக்களை யார் நியமிப்பது என்பது பற்றிப் போப் VII-ம் கிரெகரியும் (1073-85), சக்கரவர்த்தி IV-ம் ஹென்ரியும் (1056-1106) சண்டையிட்டுக் கொண்டனர். ஹென்ரி 1077-ல் போப் தங்கியிருந்த கனோசா கோட்டைக்குச் சென்று போப்பிடம் அடிபணிந்கான். ஆனால் 1084-ல் இவன் ஒரு சேனையைத் திரட்டி ரோமைத் தாக்கினான். போப் நார்மானியர்களால் காப்பாற்றப்பட்டார். சக்கரவர்த்தி V-ம் ஹென்ரியும், போப் II-ம் காலிக்ஸ்டசும் செய்துகொண்ட வர்ம்ஸ் (Worms) உடன்படிக்கைப்படி இச் சண்டை 1122-ல் முடிவடைந்தது. ஆனால் மற்ற விஷயங்களைப்பற்றி இச் சச்சரவு மீண்டும் தொடர்ந்தது. 11ஆம் நூற்றாண்டில் இத்தாலிய வரலாற்றின் முக்கிய அமிசங்களாய் விளங்கிய வியாபாரக் குடியரசு நகரங்கள் தோன்றி வளர்ந்தன. இந் நகரங்களில் முக்கியமானவை வெனிஸ், பீசா, ஜெனோவா, மிலான் முதலியன. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சார்டீனியாவை முகம்மதிபர்களிடமிருந்து பீசா கைப்பற்றியது. முதலில் படைமானியப் பிரபுக்களாலும், பிறகு பிஷப்புக்களாலும் ஆளப்பட்டுவந்த இந்நகரங்கள் கடைசியில் தத்தம் மக்களாலேயே ஆளப்பட்டன. 11ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந் நகரங்கள் நகர சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்சல்கள் (Consuls) என்ற கவர்னர்களால் ஆளப்பட்டு வந்தன. 1085-ல் பீசாவிலும், 1087-ல் மிலானிலும், 1089-ல் ஜெனோவாவிலும் கான்சல்கள் தோன்றினார்கள்.

டஸ்கனியில் 1115-ல் பானிபேஸ் (Boniface) பிரபுவின் மகளான மாடில்டாவின் ஆதிக்கம் மறைந்த பிறகு பிளாரன்ஸ் நகரத்தில் குடியரசு ஏற்பட்டது. காமோ, லோடி, பாவீயா, கிரிமோனா, வெரானா, பாடுவா, பலௌன்யா, மாடெனா, சையனா என்னும் நகரங்கள் ஒவ்வொன்றும் தன் பக்கத்திலுள்ள நாட்டைக் கைப்பற்றுவதிலும், படைமானியப் பிரபுக்களைத் தோற்கடித்து அவர்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொள்வதிலும், அண்டை நகரத்தின் வியாபாரத்தை நசுக்குவதிலும் முனைந்திருந்தது. இந்தச் சண்டை சச்சரவுகளினின்றும் குவெல்ப், கிபலின் (Gwelphs and Ghibellines) என்ற கட்சிகள் தோன்றின. மேற்கூறிய நகரங்கள் புனித ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டபோதிலும், தம் சொந்த, உள்நாட்டு விவகாரங்களில் பூர்ண சுதந்திரத்தைக் கொண்டாடின. இவற்றுள் தலை சிறந்து விளங்கிய மிலான் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தையே எதிர்த்தது. இதை விரும்பாத சக்கரவர்த்தி பிரெடரிக் பார்பராசா (Frederick Barbarossa, 1152-90) மிலான் மீது படையெடுத்து, அந்நகரின் ஒரு பகுதியை எரித்தான் (1162). இதனால் எச்சரிக்கப்பட்ட வட இத்தாலியின் வியாபார நகரங்கள் 1167-ல் தம் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒன்று கூடி லாம்பர்டு சங்கத்தை நிறுவின. இச் சங்கம் போப்பிற்கும் சக்கரவர்த்திக்கும் நடந்த சண்டையில் போப்பின் சார்பில் சேர்ந்து, 1176-ல் லக்னானோ என்னுமிடத்தில் சக்கரவர்த்தியின் சேனையை முறியடித்தது. கான்ஸ்டன்ஸ் உடன்படிக்கைப்படி (1183) இந்நகரங்கள் தம் சொந்த விவகாரங்களில் பூர்ண சுதந்திரத்தைப் பெற்றன. இதற்குப் பிறகு இந் நகரங்கள் விரைவில் முன்னேற்றமடைந்தன. ஜெனோவாவும் பீசாவும் மிக்க பலம் வாய்ந்த நகரங்களாய்த் திகழ்ந்தன. ஆனால் கப்பற் படையிலும், வியாபாரச் செழுமையிலும், வருமானத்திலும் முதன்மையானது தனியாட்சி நடத்திவந்த வெனிஸ் நகரமே யாகும். இது நாலாம் சிலுவைப் போரைத் தன் சொந்த இலாபத்திற்கே பயன்படுத்திக் கொண்டது.

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நார்மானியர்களின் இராச்சியம் புனித ரோமானிய சாம்ராச்சியத்தோடு இணைந்தது. பார்பராசாவின் மகன் ஹென்ரி, நார்மன் இளவரசியும் நார்மன் இராச்சியத்தின் வாரிசுமான