பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

602

இந்தியா

25,000 (1952), டிரினிடாடும் டோபாகாவும் : 2,14,177 (1952).

10. பிரிட்டிஷ் கயானா: இந்தியர் தொகை 1,90,880 (1952). மொத்தத் தொகையில் இந்தியர் தொகை 47%.

வரலாற்றுத் தொடக்கக் கால இந்தியா

வரலாற்று முற்காலம் (Pre-history), வரலாற்றுத் தொடக்கக் காலம் (Proto-history) என்பவை மனித நாகரிகத்தின் இரு படிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் முதலாவதில் எவ்வகையான எழுத்துப் படிப்பும் இல்லை எனக் கருதப்படுகிறது. இரண்டாவதில் எழுத்துப் படிப்பு அறியப்பட்டிருந்தது. எழுத்து மூலமாகவும் கர்ண பரம்பரையாகவும் வரும் மரபுகள் அக் காலத்தில் இலக்கியமும் இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன. ஆனால் இந்த இலக்கியத்தின் அடையாளங்கள் இப்போது கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றை இதுவரை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் வரலாற்றுத் தொடக்கக் காலமானது ஏதாவது ஒரு நாளில் வரலாற்றுக் காலமாக மாறிவிடக் கூடும். வரலாற்றுக் காலத்தின் பண்பாடும் நாகரிகமும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த வரையறைப்படி இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் பின்வரும் இரண்டு காலங்களும் அடங்கும் : (1) வரலாற்றுமுன் கற்காலப் பண்பாடுகளைப் பின் தொடர்ந்ததும், வட இந்தியாவில் வரலாற்றுக் காலத்திலே அறியப்படும் அரச வமிசங்களின் (சு. கி. மு. 600-500) தோற்றத்தைக் குறிப்பதுமான காலம். சிந்து, ராஜபுதனம்,பஞ்சாப் உட்பட்ட வடமேற்கு இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் தழைத்து நின்ற காலம் அதுவாகும். அக் காலத்தில் ஒருவித எழுத்து வழக்கிலிருந்தது. அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. (2) வேதங்களிலும் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும், முக்கியமாகப் புராணங்களிலும் விவரிக்கப்படும் காலம். நாட்டை ஆண்ட பல வமிசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பற்றிய திருத்தமான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

ஹாரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும், சான்னுதாரோவிலும் நடைபெற்ற அகழ்தலிலிருந்து (Exca- vation) சிந்து நதி நாகரிகத்தின் தோற்றத்தைப்பற்றிய உண்மை எதுவும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தொழிலை முக்கியமாகக் கொண்ட கிராமிய இனங்கள் சில இந்திய - பாரசீக எல்லையின் சமவெளிகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தன என்றும், அவைகளே நாளடைவில் இந்த நகர நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்றும் கருதலாம். பாரசீகத்தினால் இந்த நாகரிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபற்றி நிச்சயமாக ஒன்றும் கூறுவதிற்கில்லை. சிந்து நதி நாகரிகத்திற்கு முற்பட்ட பண்பாட்டைப் பற்றி எழுத்து மூலமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சாயந் தீட்டப்பெற்ற அக் கால மட்பாண்டங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து, அக்காலத்தில் வெவ்வேறான நான்கு பண்பாடுகள் இருந்திருக்க வேண்டும் எனப் பிரித்தறியப்பட்டுள்ளது. அவை குவெட்டா பண்பாடு, ஆம்ரிநால் பண்பாடு, குட்லி பண்பாடு, ஷோப் பண்பாடு எனப்படும். இவற்றுள் இரண்டாவதன் வழியில் சிந்து நதிப் பண்பாடு தோன்றியது. ஆனால் ஆம்ரிநால் பண்பாடே சிந்து நதி நாகரிகத்திற்குக் காரணமானது என்று கூறுவதற்கில்லை.

தற்காலத்திய சிந்துவிலும், பஞ்சாபிலும், பலூச்சிஸ்தானத்திலும், ராஜபுதனப் பகுதிகளிலும் சுமார் 1,000 மைல் நீளம், 400 மைல் அகலப் பரப்பில் இந்நாகரிகம் பரவி இருந்தது. அப்போது இப் பகுதிகளின் தட்பவெப்பம் இன்றுள்ள அளவுக்கு வறட்சியாக இருக்கவில்லை. பருவ மழையினால் பயன்பெற்ற இப் பிரதேசங்களில் ஓடிய பெரு நதிகள் போதிய நீர்வசதி அளித்தன. ஆகையால் அங்கு வளர்ந்த வளமான காடுகளில் புலி, காண்டாமிருகம், யானை முதவிய விலங்குகள் திரிந்தன. அங்கிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் பொதுவான பண்பாட்டையுடைய நகரங்களும் கிராமங்களும் பெருகின. அக் காலத்தவர் நேராகவும் அகலமாகவும் இருந்த தெருக்களும், மூடிய சாக்கடைகளும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளிக்கும் அறை முதலிய வசதிகளுள்ள வீடுகளும் அமைந்த நகரங்களைக் கட்டியிருந்தனர். இரண்டு அல்லது மூன்றுவிதச் சாயங்கள் தீட்டப்பட்ட அழகிய மட்பாண்டங்களை அவர்கள் புழங்கினர். அவர்கள் தங்கத்தாலும் மணிகளாலும் ஆன நகைகளையும் பருத்தித் துணிகளையும் அணிந்தனர்; கோதுமை, பார்லி, இறைச்சி, மீன் முதலியவற்றை உணவாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. ஒருவகைச் சித்திர எழுத்தைக் கையாண்டனர். மக்களிற் பெரும்பான்மையோர் வினோத வடிவமுள்ள ஒரு பெண் தெய்வத்தையும், சிவலிங்கத்தையொத்த பிம்பத்தையும், மரங்களையும் தொழுதனர். இவ்வளவு நாகரிகமடைந்தும் அவர்கள் கல்லால் செய்த ஆயுதங்களையே அதிகமாக உபயோகித்தனர். இவற்றோடு செம்பினாலும் வெண்கலத்தாலும் ஆன சில ஆயுதங்களும் படைக்கலங்களும் வழக்கத்தில் இருந்தன.

இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது என்பது சரிவரத் தெரியவில்லை. சிந்து நதிப் பள்ளத்தாக்குக் காலப்போக்கில் வறண்டு போனதால் இது மறைந்திருக்கலாம். அல்லது குதிரைகள் பூட்டிய வேகமான தேர்களையும், கத்திகளைப் போன்ற சிறந்த படைக் கலங்களையும் கொண்ட ஆரியர்கள் இவர்களை வென்று அழித்திருக்கக் கூடும்.

ஆரியமொழி பேசிய ஓர் இனத்தார் ஆரியரல்லாத இனம் ஒன்றன் நாகரிகத்தை அழித்துவிட்டனர் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் குறிப்புக்களைத் தவிர இவர்களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. சிந்து நதி நாகரிகம் சு. கி. மு. 1500-ல் அழிந்தது. இதற்கும் வடகிழக்கு இந்தியாவில் கி. மு.600-ல் வரலாற்றுக் கால வமிசங்கள் தோன்றியதற்குமிடையே உள்ள காலத்தில் ஆரியர்களின் செயல்களை அந்நூல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஆனால் இக்காலத்தைப் பற்றிய தொல் பொருள் ஆராய்ச்சி உண்மைகள் கிடைக்கவில்லை. இதைப்பற்றி நாம் அறிவனவெல்லாம் இலக்கியத்திலுள்ளனவே யாகும்.

ஆரியர்கள் முதலில் மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள் என்றும், பஞ்சாபிலிருந்து பீகாரில் பாட்னாவரையிலும் தெற்கே விதர்ப்பம் வரையிலும் அவர்கள் பிற்காலத்தில் பரவினார்கள் என்றும் வேதங்களிலிருந்து அறியலாம். இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக முனிவர்கள் வழிபட்டனர். க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட்டனர். வைசியர்கள் நிலத்தை உழுது கால்நடைகளை வளர்த்தனர். அரசுகள் இருந்தன. திவோதாசன், சுதாசன் போன்ற புகழ்பெற்ற அரசர்கள் இருந்தார்கள். ஆரியர்கள் நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் பரவியபோது யாகங்கள் முக்கியமானவை