பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

613

இந்தியா

ஆண்டுகள் ஆண்டான். அசோகனுடைய பிரதிநிதியும் யவன ராஜனுமான துஷாஸ்மன் சௌராஷ்டிரத்திலுள்ள சுதர்சன ஏரியைப் பெரிதாக்கி அழகுபடுத்தினன் என்கிறது ஒரு சாசனம்.காச்மீரத்தில் ஸ்ரீநகரமும்,நேபாளத்தில் தேவ பட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்ட பட்டணங்கள் என்று ஓர் ஐதிகம் உண்டு. அசோகன் உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய தரும வீரன் என்று புகழ் பெற்றவன். மக்களுடைய நன்மைக்காகத் தான் இடைவிடாது பாடுபட்டது மன்றி, ஆயிரக்கணக்கான உத்தியோகஸ்தரையும் அவ்வாறே செய்யும்படி செய்தவன். தான் பௌத்த மதத்தைத் தழு வியபோதிலும் மற்ற மதங்களையும் ஆதரித்து வந்தான். கயைக்கு அருகிலுள்ள பராபர் மலையில் சில நேர்த்தியான குகைகளைக் குடைந்து, ஆஜீவிக சன்னியாசிகளுக்குக் கொடுத்தது இதற்கொரு சான்று.

அசோகனுக்குப்பின் மௌரியர்களின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. புராணங்களில் மௌரிய அரச வமிசங்கள் 137 என்று காண்கிறோம். அசோகன் பேரனான தசரதனும் அவனைப்போலவே ஆஜீவிக சன்னியாசிகளுக்கு மலைக் குகைகள் கொடுத்தான் என்று சாசனங்களால் அறிகிறோம். அசோகன் பௌத்தர்களுக்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்ப்ரதி என்னும் மற்றோர் அரசன் சமண மதத்தைத் தழுவிச் சமணர்களுக்குச் செய்தான் என்பது சமணர்களின் கூற்று. அவன்பின் ஆண்ட சாலிசூகனும் சமணர்களை ஆதரித்தான் என்று எண்ண இடமுண்டு. பொதுவாக அசோகனுக்குப் பின் வந்த அரசர்கள் பலம் குறைந்தவர்கள். அவர்கள் காலத்தில் வடமேற்கிலிருந்து கிரேக்கர் இந்தியாவின்மேற் படையெடுக்கத் தொடங்கினர். அவ்வரசர்களில் கடைசியில்ஆண்ட பிருகத்ரதனை அவன் சேனாதிபதியான புஷ்யமித்திரன் அவனை ஆட்சியை விட்டு நீக்கித் தானே அரசனாகிச் சங்கவமிசத்தை நிறுவினான். இது நடந்த காலம் சுமார் கி. மு.184. இதற்குச் சற்று முன்பின்னாகக் கலிங்க நாட்டில் சேடவம்சத்தரசர்களும், தட்சிண தேசத்தில் சாதன அரசர்களும் தங்கள் சுய ஆட்சிகளை ஆரம்பித்தனர்.

மௌரியர்கள் காலத்தில் இந்தியா மேனாடுகளோடு அதிகமாக வியாபாரம் நடத்தத் தொடங்கியது. அதன் பயனாக அரசாட்சி முறைகளிலும், கட்டடம், சிற்பம் முதலிய கலைகளிலும் மேனாடுகளிலுள்ள வழக்கங்களும் முறைகளும் இந்தியாவை வந்தடைந்தன. அசோக சாசனங்கள் பாரசீக அரசர்களின் சாசனங்களைப் பின்பற்றியவை. இந்து தரும சாஸ்திரப்படி, அரசனுக்குப் புதிதாகச் சட்டங்கள் ஏற்படுத்த உரிமை இல்லை. ஆயினும் கௌடிலியன் தனது அர்த்த சாஸ்திரத்தில் தருமம், விவகாரம், சம்பிரதாயம் எல்லாம் அரசனுடைய சாசனத்திற்குக் கீழ்ப்பட்ட திறன் உடையவை என்று தெளிவாகக் கூறுகிறான். இதுவும் கிரேக்க நாட்டு அரசியல் முறையைப் பின்பற்றி இருக்கலாம். அரசாட்சி முறை பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்களின் உதவியைக் கொண்டு நன்கு நடைபெற்ற இதுவும் பாரசீக, கிரேக்க முறைகளைப் பின்பற்றிய வளர்ச்சியே. குடிகளின் நன்மைக்காக அரசன் இடைவிடாது பாடுபட்டான். அசோகன் தான் எங்கிருந்தாலும், அவசரச் செய்திகளை உத்தியோகஸ்தர்கள் தன்னிடம் எக்காலத்திலும் தெரிவித்துத் தன் ஆணைகளைப் பெறலாம் என்று சாசனங்களில் கூறுகிறான். அரண்மனையில் அரசனுக்குரிய பணிவிடைகளெல்லாம் பெண்களாலேயே செய்யப்பட்டன. அவனைச் சூழ்ந்திருந்த மெய்க்காவலர்களும் பெண்களே. அரசகுமாரர்கள் படிப்பிலும் அரசியல் முறைகளிலும் தேர்ச்சி பெற்று, வயது வந்ததும் சாம்ராச்சியத்தின் பல பாகங்களில் பெரிய உத்தியோகங்களில் அமர்வது வழக்கம். தலை நகரான பாடலிபுத்திரம் கங்கையும் சோணையும் சேருமிடத்தில் மிகவும் அழகாகவும் உறுதியான கோட்டை கொத்தளங்களுடனும் அமைந்திருந்தது. அதைச் சுற்றியிருந்த மதிற் சுவரில் அறுபத்து நாலு வாயில்களும், ஐந்நூற்றெழுபது கோபுரங்களும் இருந்தன. நகர ஆட்சி முப்பதுபேர் கொண்ட நகரசபையால் நடத்தப்பட்டது. இச் சபைக்கு உள்ளடங்கி ஆறு பஞ்சாயத்துக்கள் வேலை செய்தன. சாம்ராச்சிய அலுவல்களைக் கவனிக்க அரசனுக்கு உதவியாக மந்திரிசபை இருந்தது. அதைத் தவிர இராசதானியிலும் முக்கியமான வெளியூர்களிலும் தரம் தரமாகப் பல இலாகாக்களைச் சார்ந்த உத்தியோகஸ்தர்கள் ஏற்பட்டிருந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தர்களின் பதவிகளின் பெயர்களும், தொழில்கள், மாதச் சம்பளங்கள் முதலிய விவரங்களும் மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்புக்களில் விரிவாகக் காணப்படுகின்றன. சந்திரகுப்தனுடைய படை ஆறு இலட்சம் காலாட்களும், முப்பதாயிரம் குதிரைகளும், ஒன்பதாயிரம் யானைகளும் அடங்கியது. படைகளுக்கு வேண்டிய உணவு, வைத்தியம் முதலிய ஏற்பாடுகளும் அந்தந்த இலாகாக்களால் கவனிக்கப்பட்டுவந்தன.

விவசாயம், கைத் தொழில், வியாபாரம் எல்லாம் சிறந்து வளர்ந்தன. காசி, மதுரா முதலிய நகரங்கள் நேர்த்தியான பருத்தி ஆடைகளும், பட்டுத் துணிகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. வியாபாரிகள் கூட்டங் கூட்டமாகத் தரை வழியாகவும், தோணிகளில் நதிகளின் வழியாகவும், கப்பல்களில் கடல் வழியாகவும் தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்தார்கள். மௌரியர் காலத்து நாணயங்களுக்குத் தரணங்கள், கார்ஷாபணங்கள் என்ற பெயர்கள் வழங்கிவந்தன.

கடைசியில் ஆண்ட மௌரிய அரசனான பிருகத்ரதனைக் கொன்று சுங்க வமிச ஆட்சியைத் தொடங்கிய புஷ்யமித்திரன் ஓர் அந்தணன். அவன் ஆண்டது முப்பத்தாறு ஆண்டுகள். அவன் இரண்டு அசுவமேத யாகங்கள் செய்தான். பௌத்த சமயத்திற்கு அவன் ஒரு பெரிய விரோதி என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் இந்தியாவின்மேல் படையெடுத்து வந்த கிரேக்கர்களோடு அவனும் அவன் மகன் அக்கினிமித்திரனும் போர் புரிந்தார்கள். தகப்பனுக்குப் பின் அக்கினிமித்திரன் எட்டாண்டுண்டுகள் ஆண்டான். அவனுக்குப்பின் சுங்கவமிசத்து அரசர்களின் வரிசை பின்வருமாறு புராணங்களில் காணப்படுகிறது. (வ) சுஜேஷ்டன் 7 ஆண்டுகள்; (வ) சுமித்திரன் 10 ஆண்டுகள்; ஒட்ரகன் 7 அல்லது 2 ஆண்டுகள்; புலிந்தகன் 3 ஆண்டுகள்; கோஷன் (வசு) 3 ஆண்டுகள்; வஜ்ரமித்திரன் 9 அல்லது 7 ஆண்டுகள்; பாக(வத)ன் 32 ஆண்டுகள்; தேவபூதி 10 ஆண்டுகள்; மொத்தம் பத்துச் சுங்க அரசர்கள் 112 ஆண்டுகள் அதாவது கி.மு. 184 முதல் 72 வரை ஆண்டார்களெனக் கணக்கிடப்படுகிறது. நாடகத்தில் அதிக விருப்பங்கொண்ட சுமித்திரன் நடிகர்களுக்கு நடுவே இருந்த காலத்தில் மித்திர தேவனால் எளிதில் கொல்லப்பட்டான் என்று தமது ஹர்ஷ சரித்திரத்தில் பாணகவி கூறுகின்றார். ஒட்ரகனுடைய ஆட்சியின் பத்தாவது ஆண்டில் ஒரு குகை குடையப்பட்டதாகச் சாசனம் இருப்பதால் புராணத்தில் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஆட்சி ஆண்டுகளில் ஏதோ தவறு இருக்கவேண்டும்.