பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

636

இந்தியா

ராஜபுத்திரர், சீக்கியர், மகாராஷ்டிரர் முதலியோர் மொகலாயப் பேரரசுக்கு எதிரிகளாக அதனை அழிக்க முற்பட்டனர். பலவந்தமாக மதமாற்றும் வழக்கம் கையாளப்பட்டது. குர்ஆனில் கண்ட கொள்கைகளை முஸ்லிம்கள் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்வதற்கென்று பல உத்தியோகஸ்தர்களைப் பெரிய நகரங்கள் பலவற்றில் அவன் நியமித்தான்.

ஔரங்கசீபு ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரத்தில் சிவாஜி சுய ஆட்சியை ஏற்படுத்திப் புகழோடு விளங்கினான். அவனை முறியடிப்பதற்காக ஒளரங்கசீபு ஷாயிஸ்டகான், ஜயசிங் போன்றவர்களைத் தக்கணத்துக்கு அனுப்பினான். ஷாயிஸ்டகான் பெருத்த அவமானத்திற்குள்ளாகித் திரும்பினான். பின்னர் ஜயசிங் போர்புரிந்து சிவாஜியை வெல்ல முடியாமல் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆக்ராவிற்குச் செல்லும்படி சிவாஜியைத் தூண்டினான். சிவாஜியும் அவ்வாறே ஆக்ராவுக்குச் சென்றான் (1666). அங்கே ஓர் அரண்மனையில் ஒளரங்கசீபினால் சிறையிலிடப்பட்டான். சிவாஜி தந்திரமாகச் சிறையினின்றும் தப்பி மகாராஷ்டிரம் வந்துசேர்ந்தான். பிறகு சிவாஜி இறக்கும் வரை மொகலாயர்களுக்குப் பணியவில்லை. அதன் பின்னரே சாம்பாஜியைப் பிடித்துக் கொன்று மகாராஷ்டிரத்தை ஔரங்கசீபு வசப்படுத்திக் கொண்டான். அதே சமயத்தில்தான் கோல்கொண்டா, பிஜாப்பூர் ஆகியவையும் அவன் வசமாயின.

இந்துக்களை ஒளரங்கசீபு மிகவும் துன்புறுத்தினான். அரசாங்க உத்தியோகங்களினின்றும் அவர்கள் நீக்கப் பட்டார்கள். பலவிதமான தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. இந்துக்கோயில்களை இடித்து விடுமாறு ஆணை பிறந்தது. இதன் பயனாகக் காசி, வட மதுரை, சோமநாதபுரம் ஆகியவற்றிலுள்ள கோயில்கள் அழிக்கப்பட்டன. 1679-ல் ஜசியா வரி அவர்கள் மீது விதிக்கப்பட்டது. இந்துக்கள் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டனர். இவற்றால் நாடெங்கும் கலகம் ஏற்பட்டு மொகலாயப் பேரரசு கலகலத்துப் போயிற்று. ஒளரங்கசீபின் ஆளுகையின் தொடக்கத்தில் அப்பேரரசு மிகப் பெரியதாயிருந்தது. அதே ஆட்சியின் இறுதியில் பல பகுதிகள் சுயேச்சை பெறப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. ராஜபுத்திரர்களும் சீக்கியர்களும் சுயேச்சை பெற முயன்றனர்.

ஒளரங்கசீபு தனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் தென்னாட்டின்மீது படையெடுத்துப் பிஜாப்பூர், கோல்கொண்டா ஆகியவற்றை வென்றபின் மகாராஷ்டிரத்தின் மீதும் படையெடுத்துச் சிவாஜியின் குமாரன் சாம்பாஜியைத் தோற்கடித்து, அவனைக் கொடுமையான முறையில் சித்திரவதை செய்து கொன்றான். பின்னர் சாம்பாஜியின் தம்பி ராஜாராமும் அவன் மனைவி தாராபாயும் மகாராஷ்டிரத்தின் சுதந்திரப் போரைத் தொடர்ந்து நடத்தி மொகலாயர்களுக்கு இன்னல் விளைவித்து வந்தனர். எழுச்சி பெற்ற மகாராஷ்டிரர்களை ஔரங்கசீபினால் அடக்க இயலவில்லை. பயனற்ற போராட்டத்தினால் அரசாங்கத்தின் கருவூலம் வறண்டது. கடைசியில் ஒளரங்கசீபு தனது எண்பத்தொன்பதாவது வயதில் தன் குறைபாடுகளை நினைந்து வருந்தி அகமது நகரில் இறந்தான் (1707). அவனது உடல் தௌலத்தாபாத் நகரில் புதைக்கப்பெற்றது.

ஒளரங்கசீபின் சந்ததியினர் திறமையும் ஊக்கமும் அற்றவர்கள். ஆகவே, தங்கள் பேரரசை அழியாமல் காப்பாற்ற அவர்களால் இயலவில்லை. மொகலாயப் பேரரசின் பல பாகங்களான பஞ்சாப், ராஜபுதனம், தக்கணம், மகாராஷ்டிரம் போன்றவை இக்காலத்தில் சுயேச்சை பெற்றன. மகாராஷ்டிரத்தில் பேஷ்வாக் கள் அதிகாரம் பெற்று, வட இந்தியாவிலும் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். ஹோல்கர், காயகவார், சிந்தியா போன்ற மகாராஷ்டிரத் தலைவர்கள் இந்தூர், பரோடா, குவாலியர் ஆகிய இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மொகலாய சக்கரவர்த்திகளும் அவர்கள் ஆதிக்கத்துக்குட்பட்டு விட்டனர். டெல்லி அரசவையிலும் கட்சிகள் தோன்றி, ஒவ்வொரு கட்சியும் சக்கரவர்த்தியைத் தன் தன் கைப்பாவையாக்கிக் கொள்ள முயன்றது. இந்நிலையில் நாதர்ஷா என்ற பாரசீக மன்னன் 1739-ல் இந்தியாவின்மீது படையெடுத்தான். மொகலாயப் படைகள் போரில் தோற்றோடின. பின்னர் சக்கரவர்த்தி முகம்மது ஷாவுக்கும் நாதர்ஷாவுக்கும் சாமாதானம் ஏற்பட்டது. புகழ் பெற்ற மயிலாசனமும் கோகினூர் வைரமும் நாதர்ஷா கையில் சிக்கின. எட்டாண்டுகள் கழித்து நாதர்ஷாவின் உத்தியோகஸ்தனான அகமத்ஷாதுரானி இந்தியாவின் மீது படையெடுத்துப் பஞ்சாப் பகுதியை வென்றான். வட இந்தியாவில் ஆதிக்கத்துக்காக மகாராஷ்டிரர்கட்கும் அகமத்ஷாவுக்கும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக 1761-ல் நிகழ்ந்த மூன்றாவது பானிப்பட்டுப் போரில் மகாராஷ்டிரர் படுதோல்வியடைந்தும், விரைவில் தங்கள் ஆதிக்கத்தை வட இந்தியாவில் ஏற்படுத்திக்கொண்டனர். மொகலாயச் சக்கரவர்த்தி இரண்டாம் ஷாஆலம் அவர்கள் ஆதரவில் இருந்தான். பிறகு பக்சார் சண்டைக்குப்பின் ஆங்கிலேயர் நட்பைப் பெற்றுக் கோரா, அலகாபாத் ஜில்லாக்களையும் ஆண்டொன்றுக்கு 26 இலட்ச ரூபாயையும் அவர்களிடமிருந்து பெற்றான். கடைசி மொகலாயச் சக்கரவர்த்தி II-ம் பகதூர்ஷா இந்தியக் கிளர்ச்சியின் போது பிரிட்டிஷாரை எதிர்த்தான். தலைவர்கள் எல்லோரும் அவனை இந்தியச்சக்கரவர்த்தியென விளம்பரம் செய்தனர். கடைசியில் அக்கிளர்ச்சி ஆங்கிலேயரால் அடக்கப்பட்டது. பகதூர்ஷாவின் குமாரர்கள் ஆங்கிலேயரால் டெல்லியில் கொல்லப்பட்டனர். அவனும் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டு, ரங்கூனில் வாழ்ந்து 1862-ல் இறந்தான்.

சீக்கிய மதத் தாபகர் குரு நானக் (1469-1538) பஞ்சாபிலிருந்த ஒரு மதச் சீர் திருத்தக்காரர். நல்லொழுக்கம், சாதி பேதமின்மை , கடவுள் ஒருவரே என்னும் கொள்கை ஆகியவற்றை அவர் பரவச் செய்தார். அவர் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் ஒன்றுபடுத்த முயன்றார். அவருக்குப்பின் வந்த சீக்கியக் குருமார்கள் அந்த மதப் பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். அது விரைவாகப் பரவியது. ராமதாஸ் (1574-81) என்னும் நான்காவது குரு அக்பரிடமிருந்து இக்காலத்தில் அமிர்தசரஸ் என வழங்கும் இடத்தைப்பெற்று ஒரு பெரிய ஏரியை வெட்டி, அதன் நடுவே புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டினார். அந்த ஏரிக்கு அமிர்தசரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அமிர்தசரஸ் சீக்கியர்கள் ஒன்று சேரவும் பிரார்த்தனை செய்யவும் தக்க புண்ணிய நகரமாயிற்று. அவருக்குப் பின்வந்த குரு அர்ஜுன் சிங் (1581-1606) சீக்கியர்களை ஒன்றுபட்ட ஒரு சமூகமாக்கினார். குரு நானக்கின் உபதேசங்களையும் மற்ற இந்து, முஸ்லிம் பெரியார்களின் பாடல்களையும் தொகுத்து, ஆதிக்கிரந்தம் என்னும் சீக்கிய வேதபுத்தகத்தை உருவாக்கினார். அவர் ஜகாங்கீருடைய விரோதத்தைப் பெற்றுக் கொலைத்தண்டனை அடைந்தார். இச்செயல் சீக்கியர் மனத்தில் ஆறாப்புண்ணை உண்டாக்கியது. பின் வந்த குருமார்கள் தலைமையில் சீக்கியர் மொகலாயப்