பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

708

இந்தியா

குழிகளிலிருந்து நிலவாயு வெளி வந்தது. மசூலிப்பட்டினத்தின் அருகிலும் இவ் வாயு வெளி வந்தது கண்டார்கள். இவ் வாயுவில் மெதேன் என்ற வாயு அதிகமாக இருப்பதால் இதை அடுப்பெரிக்கவும் விளக்கெரிக்கவும் பயன்படுத்தலாம். தொழில்களில் பயனாகும் அளவிற்கு இது கிடைப்பதில்லை. அண்மையில் படிந்த அடுக்குக்களில் புதைந்துபோன தாவரங்கள் சிதைவதால் இவ் வாயு தோன்றுகிறது. பெட்ரோலியம் இருப்பதை இவை காட்டுவதாக எண்ணுவது தவறு.

கோலாரில் நடைபெறும் தங்கச் சுரங்க வேலையைப் பற்றி மேலே கூறப்பட்டது. தங்கத்தைக் கொண்ட பாறைகள்கோலாரிலிருந்து சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம்வரை உள்ளன இப்பகுதியிலுள்ள பாறைகளில் தங்கம் குறைவாக உள்ளது. ஆனால் மேலும் ஆராய்ந்தால் இலாபகரமாக வெட்டி எடுக்கத்தக்க பாறைகள் கிடைக்கலாம். ஐதராபாத்திலுள்ள ஹட்டி என்ற ஊரிலும் தங்கச்சுரங்க வேலை நடைபெறுகிறது. மலையாளத்தில் வயநாட்டுப் பகுதியில் முன்னர்ச் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் ஓடைகளின் வண்டலலிருந்தும், பரலிலிருந்தும் கிராமவாசிகள் தங்கத்தைக் கழுவி எடுக்கிறார்கள். இப்பகுதிகளை விரிவாக ஆராய்ந்தால் சுரங்க வேலையை மீண்டும் தொடங்க வழியேறபடலாம். மைசூரில் கிடைக்கும் தங்கத்துடன் 100க்கு 3 பாகம் வெள்ளியும் கலந்திருக்கிறது. இதைத் தவிர இந்தியாவில் வெள்ளி உற்பத்தியே இல்லை.

செம்பு : நெல்லூர் மாவட்டத்திலுள்ள கரிமன பேட்டை என்னுமிடத்திலும், குண்டூர் மாவட்டத்திலுள்ள வினுகொண்டாவின் அருகிலும், கோவை, கர்நூல் மாவட்டங்களிலுள்ள சில இடங்களிலும் செம்பு காணப்படுகிறது. இவ்விடங்களில் எல்லாம் பழங்காலத்தில் உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை நடந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாய்க் கரிமனபேட்டையிலும் வினுகொண்டாவிலும் சுரங்க வேலையை மீண்டும் தொடங்கக்கூடும் எனத் தெளிவாகியுள்ளது. இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படும் தாதுக்கள் ஆழத்திலும் இருக்கும் என்று கூறமுடியாது. இதை அறிய மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தியாவில் செப்புத் தாதுக்கள் குறைவு. ஆகையால் இந்த ஆராய்ச்சி மிக முக்கியமானது.

ராயலசீமையிலுள்ள ஜங்கம் ராஜபல்லி, பசவாபுரம், கோயில், குண்ட்லா, சித்யாலா, கானி (Gani)போன்ற இடங்களில் காரீயத்தையும் நாகத்தையும் வெட்டி எடுக்கும் வேலை நடைபெற்றதற்கு அறிகுறிகள் உள்ளன. குறைவான அளவு உலோகமுள்ள தாதுக்கள் இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இவ்விடங்களை மேலும் ஆராய்ந்தால் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க தாதுக்கள் ஆழத்தில் உள்ளனவா என அறியலாம். இவ்விரு உலோகங்களும் இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால் இப்பகுதிகளை ஆராய்வது அவசியம்.

அலுமினியத்தின் முக்கியத் தாதுவான பாக்சைட்டு சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலைக்குன்றுகளில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் 60லிருந்து 70 இலட்சம் டன் வரையுள்ள தாதுக்கள் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்த ரகமானது. கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க பாக்சைட்டுக் கிடைக்கலாம்.

பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதோடு, வெப்பந்தாங்கும் பொருள்களையும், மெருகூட்டிகளையும் தயாரிக்கலாம். சேலத்தில் கிடைக்கும் தாது ‘அலிராக்ஸ்’ (Alirox) என்ற செயற்கை மெருகூட்டியைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

மக்னீசியத் தாதுவான மாக்னசைட்டு சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென் மைசூரிலும் காணப்படுகிறது. சேலம் ரெயில்வே சந்திப்புக்கருகிலுள்ள புலம் மிகப் பெரிது. இதில் 100 அடி ஆழத்திற்குள் சுமார் 8 கோடி டன் தாது உள்ளது.

மாக்னசைட்டிலிருந்து மக்னீசிய உலோகத்தைப் பிரித்தெடுப்பதைத் தவிர இதை எஃகு தயாரிப்பில் வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிமென்டுத் தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் மாக்னசைட்டு எஃகு தயாரிப்பில் மட்டுமே தற்போது பயன்படுகிறது. உயர்ந்த ரகமான இத்தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் தொழிலை இனியேனும் தொடங்கவேண்டும்.

திருச்சி, சேலம், மைசூர்ப் பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் உள்ளன. சுமார் 100 அடி ஆழத்திற்குத் திருச்சி, சேலம் மாவட்டங்களில் 30 கோடி டன்களும், மைசூரில் 20 கோடி டன்களும் உள்ளன. கர்நூல் மாவட்டத்திலுள்ள ராமலகோடாவில் 40 இலட்சம் டன் நிறையுள்ள உயர்ந்த ரக இரும்புத் தாது உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதுவைப் பொடித்து, அதனுடன் கலந்திருக்கும் படிகக் கல்லைப் பிரித்து, அதைச் செறிவாக்கிய பின்னரே அதிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கலாம். உலோகத்தைப் பிரித்தெடுக்கத் தேவையான நிலக்கரியையோ, கல் கரியையோ பீகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வரவழைக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மலிவாகக் கிடைத்தால் இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் இங்கே வளர வழியுண்டு.

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரிவிதியிலும் பெல்லாரியிலுள்ள சாண்டூரிலும், மைசூரின் சில பகுதிகளிலும் மாங்கனீஸ் தாதுக்கள் கிடைக்கின்றன. சாண்டூர்ப் பதியில் மட்டும் 3 கோடி டன் தாது உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத் தாதுக்கள் 45%க் கும் குறைவான உலோகத்தைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் ரகத் தாதுக்கள். இவற்றில் இரும்பும் பாஸ்வரமும் அதிகமாக உள்ளன. சாண்டூரில் கிடைக்கும் தாதுக்களில் சிலிக்கா குறைவாக இருப்பதால் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் எஃகு உற்பத்திக்காக இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.

இரும்பு, டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டான இல்மனைட்டு என்னும் தாது படிகப் பாறைகளில் மணிகளாகக் கிடைக்கிறது. திருவிதாங்கூர்க் கடற்கரையோரங்களிலுள்ள மணவாளக்குறிச்சி, கொல்லம், குமரி முனை முதலிய இடங்களிலும், தஞ்சை, விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கடற்கரை மணலில் இது உள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. திருவிதாங்கூர் மணலில் தாதுவின் செறிவு அதிகமாக இருக்கிறது. இத்தாது டைட்டேனிய வெள்ளை என்னும் வர்ணத்தைத் தயாரிக்கவும், டைட்டேனிய எஃகு கலவையைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் இலேசாகவும், உறுதியாகவும், ரசாயனப் பொருள்களினால் அரிபடாத வன்மையும் பெற்றிருப்பதால் வருங்காலத்தில் இதன் பயன் அதிகமாகலாம்.

உலோகமல்லாத தாதுக்களில் அப்பிரகம் முக்கிய மானது. அப்பிரகத்தில் முக்கியமான இரு மஸ்கோவைட்டு என்ற சிவப்பு அப்பிரகமும் வகைக ளான