பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி இசை

730

இந்துஸ்தானி இசை

போது நிகழும். கையின் அடிக்குச் சற்றுத் தாமதமாகத் தபலாவின் ஒலி தோற்றுவிக்கப்பட்டால் அது அதீதம் எனப்படும். கையைத் தூக்கும்போதே சுரத்தைப் பாடத் தொடங்கினால் அது அனாகதம் எனப்படும்.

வடநாட்டு இசையில் வழங்கும் தாளங்களை ஜாதிகளால் குறிப்பதில்லை. அவை ஒவ்வொன்றிற்கும் தனிப் பெயர் உண்டு. சாதாரணமாக சௌதாளம், அட சௌதாளம், பஞ்சாபி, திரிதாளம், திலவாடா, ஜம்ரா, தமர், தீப்சந்தி, ஏகதாளம், கெம்தா, தபதாளம், கெர்வா, தாத்ரா, ரூபகம், சுல்பகம் ஆகிய தாளங்கள் வழங்குகின்றன.

பாட்டுக்கள்: பக்திரசப் பாடல்களில் வடநாட்டு இசைக்கே அடிப்படையாக உள்ளது ஜயதேவரது கீத கோவிந்தம். வேறு பல பக்தர்களும் பஜன்களையும் கீர்த்தனங்களையும் ஏராளமாக இயற்றியுள்ளனர். மற்றப் பாட்டு வகைகளில் துருபதம் மிக முக்கியமானது. தென்னாட்டில் பிரபந்தத்திலிருந்து கீர்த்தனைகளும் வேறுவகை உருப்படிகளும் தோன்றியது போலவே வடநாட்டில் பிரபந்தத்திலிருந்து துருபதம் தோன்றி முஸ்லிம் படையெடுப்புக்குப்பின் இந்தியக் கலைகள் ஒரு புதுப் பண்பாட்டின் ஆளுகைக்கு உள்ளாயின. மற்றக் கலைகளைப் போலவே இசையிலும் குழப்பம் விளைந்தது. புதியனவாகத் தோன்றிய வேறு சில பாட்டு வகைகள் பிரபந்தத்துடன் போட்டியிட்டன. மிகச் சிக்கலான லய அமைப்புக்கொண்ட பிரபந்தத்தைவிட எளிய உருப்படிவகை தேவையாகியது. மேலும், அக்காலத்தில் சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து மறைந்தது. இந்த நிலையில் குவாலியர் அரசரான மன்தோமார் (1486-1526) என்பவரும், அவருடைய மனைவியான மிருகநயனியும், அவர்களுடைய ஆஸ்தானக் கலைஞரான மியான் பக்ஷக்ஷ் என்பவரும் பிரபந்தத்தின் முக்கியமான அமிசங்களையும், ஆக்ரா குவாலியர் பகுதியில் அப்போது வழக்கத்தில் இருந்த துருபதம் என்ற நாடோடி இசை வகையையும் ஒன்றாக இணைத்துத் தற்கால துருபதத்தைத் தோற்றுவித்தார்கள். தான்சேன் என்ற மேதையின் கைக்குவந்த இதை அவர் வடநாட்டின் இசைச் செல்வமாக மாற்றிவிட்டார்.

துருபதம் நான்கு பகுதிகள் கொண்டது. அவை அஸ்தாயி, அந்தரம், சஞ்சாரம், ஆபோகம் எனப்படும். இவை வேத இசையிலுள்ள உத்கீதம், பிரதிஹாரம், உபத்ரவ, நிதானம் என்பவைகளை ஒத்தவை. சாம வேதத்துடன் தொடர்புள்ளவாறு அதன் பிரஸ்தாவத்தைப்போல் ஆலாபனம் இந்நான்கு பகுதிகளுக்கு முன் சேர்க்கப்பட்டது. வடநாட்டு ஆலாபனமும் தென்னாட்டு ஆலாபனத்தை ஒத்ததே. தென்னாட்டுப் பாட்டின் பல்லவியையொத்த அஸ்தாயி பாட்டின் பொருளை நிலைநாட்டுகிறது. இது ஸ்தாயியின் மத்தியிலுள்ள சவ்வில் தொடங்கி நி யைக் கடவாது கீழ் ஸ்தாயியை அடைகிறது. அனுபல்லவியை யொத்த அந்தரம் நடு ஸ்தாயியில் ம அல்லது பவ்வில் தொடங்கி, இதையடுத்த ஸ்தாயியின் மத்தியை அடைந்து இராகத்தின் தன்மையை விவரிக்கும். சரணத்தையொத்த சஞ்சாரம் மேல் சவ்வில் தொடங்கி மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும். இரண்டாம் சரணத்தை யொத்த ஆபோகம் பாட்டின் முடிவைக் காட்டும். இது மேல் சவ்வில் தொடங்கி மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும்.

துருபதங்கள் திட்டமான சில விதிகளையொட்டிப் பாடப்பெற்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை கடவுளைத் துதிப்பனவாகவும், அரசர்களின் அருஞ் செயல்களைப் புகழ்வனவாகவும் இருந்தன. பின்னர்க் கூறப்பட்ட பாட்டுக்களில் காதலைப்பற்றிப் பாடுவதுமுண்டு. இப்பாட்டுக்களின் நடை கமகத்தையும் மீண்டையும் தவிர, மற்ற அலங்காரங்களின்றி எளிதானதாக அமைந்திருந்தது. இவை விரஜ பாஷையில் இயற்றப்பட்டன; மத்தியம காலத்தில் பாடப்பட்டன ; சௌதாளம், ஆதிதாளம், ஜம்பதாளம். ரூபகம் போன்ற சில தாளங்களிலேயே பாடப்பெற்றன. இவற்றிலும் முதலிரண்டே அதிகமாகப் பயன்பட்டன.

துருபதங்கள் நான்கு வகைகளில் பாடப்பெற்றன. இவை வாணிகள் எனப்படும். முஸ்லிம் மதத்திற்கு மாறுமுன்னர் கௌடியப் பார்ப்பனராக இருந்த தான்சேன் இவற்றுள் முதலாவதற்குக் காரணரானதால் இது கௌடியவாணி என்றழைக்கப்பட்டது. இது சவுக்கத்தில் பாடப்பெற்றது; சாந்த ரசத்திற்கு ஏற்றது.

நவுபத்கான் தோற்றுவித்த வகை கண்டவாணி எனப்படும். இது வீணை வாசிப்பைப்போன்று இடை விட்டுச் சிறு கண்டங்களாக அமைந்ததால் இவ்வாறு பெயர் பெற்றது. விசேஷ அலங்காரங்களின் உதவியால் இது பலவகைளில் பாடப்பெற்றது. இது தீவிர ரசத்திற்கு ஏற்றது. இது முதல் வகையைவிடத் துரிதமாகப் பாடப்பெற்று வலிமை வாய்ந்திருந்தது.

ராஜபுதனத்திலுள்ள தாகுர் என்ற கிராமத்திலிருந்த பிரிஜ்சந்து என்பவர் வகுத்த வகை தாகுர்வாணீ எனப்படும். எளிமை இதன் சிறப்பியல்பு. இதன் நடை சரளமாக இருக்கும்.

டெல்லி இராச்சியத்திலுள்ள நௌஹர் கிராமத்திலிருந்த ஸ்ரீசந்து என்பவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்த துருபதவகை நௌஹர்வாணி எனப்படும். ஒரு சுரத்திலிருந்து அதன் ரிஷபத்திற்குத் தாவுவது இதன் சிறப்பியல்பு. இந்த நடையின் நாத விசித்திரங்கள் வியப்பையும் அச்சத்தையும் ஊட்டும்.

ஹோரி-தமார் என்ற உருப்படி வகை பெரும்பாலும் கிருஷ்ணரது ஹோலி விளையாட்டுக்களைப்பற்றிக் கூறித் தமார் தாளத்தில் பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது. இதைத் தனியே பாடும்போது துருபதத்தைப் போலவே ஆலாபனையில் தொடங்கிப் பாடுவார்கள். இது அஸ்தாயி, அந்தரம் என்ற இரு பகுதிகளை மட்டும் கொண்டது. துருபதத்தின் நடையில் யானையின் கம்பீரத்தைக் காண்பதுபோல் இவ்வகை உருப்படியின் நடையில் பாம்பின் நெகிழ்வைக் காண்கிறோம்.

துருபதத்தில் அலங்காரங்கள் இல்லை. ஆனால் கெயால் என்ற உருப்படி வகையில் இக் குறை இல்லை. கெயால் பாட்டிற்குத் தாளமே உயிர்நாடி எனலாம். காதலுணர்ச்சியை விவரிக்கும் சிறு செய்யுள் ஒன்று இதன் பெரிய பொருளாக இருக்கும். படிகெயால் என்ற பாட்டுக்கள் சவுக்கமாகப் பாடப்பெறும். துருபதத்தில் உள்ளதுபோல் ஆலாபனம் பாட்டின் முதலில் இல்லாது அதன் இடையில் பாட்டுடன் இழைந்திருக்கும். இது விஸ்தாரம் அல்லது பர்ஹத் என்ற தாளங்களில் பாடப்படும். இதற்கு மாற்றம் என்று பொருள். இசை அமைப்பிலேயே இந்த மாற்றம் நிகழலாம், அல்லது பாட்டின் சொற்களைப் பிரித்து இதை நிகழ்த்தலாம். இவ்வாறு கெயால்களைப் பாடும் முறையைத் தான்சேனின் சீடரான நவுபத்கான் தோற்றுவித்தார். துருபதத்தில் காணப்படும் ஆலாபனம், அஸ்தாயி, அந்தரம் ஆகிய அனைத்தும் இதில் ஒன்றாக இணைந்து புதுவகைப் பாட்டிற்குக் காரணமாகின்றன. இதில் பாட்டை விரிவாக்குவதில்லை. அதை உள்ளவாறு பாடுவதுமில்லை. கெயாலில் பாடப்பெறும் சொற்கள் இசைச் சுரங்களைப் பொருத்த ஏற்ற சாதனங்களே ஆகும்.