பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை


கலைக்களஞ்சியத்தின் முதல் இரு தொகுதிகளையும் தமிழ் மக்கள் வரவேற்று ஆசி அளித்திருக்கிறார்கள். அதுபோல் இத்தொகுதியையும் அன்புடன் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

நம் கலைக்களஞ்சியத்தைப்போல் மற்ற மொழிகளிலும் உண்டாக்க மக்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. தெலுங்கில் இம்மாதிரி முயற்சி ஆரம்பிக் கப் பெற்று, நடைபெற்று வருவதை நண்பர்கள் அறிவார்கள். ஒரியா, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் இம்மாதிரிக் கலைக்களஞ்சியம் தயார் செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றை உருவாக்க நியமிக்கப்பட்டிருக்கும் குழு வினர்களிற் சிலர் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்து, தமிழ்க் கலைக்களஞ் சியம் எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதையும், எவ்வாறு உருவாகி வரு கின்றது என்பதையும் கண்டு சென்றிருக்கிறார்கள். சிங்கள மொழியில் ஒரு கலைக் களஞ்சியம் உண்டாக்குவதற்காக இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினரும் இங்கு வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள். நமது முயற்சி அவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளதை அறியத் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இப்புதிய முயற்சி யில் நமக்கிருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, இந்திய சர்க்கார் இந்தி மொழியில் தாங்கள் வெளியிட விரும்பும் கலைக்களஞ்சியத்திற்குத் திட்டம் வகுக்க ஏற்படுத்தியுள்ள கமிட்டியில் நம் பிரதம ஆசிரியரையும் அங்கத்தின ராக நியமித்திருக்கின்றனர்.


கலைக்களஞ்சியம் தயாரிப்பதென்பது மிகக் கடினமான வேலை. பல்லோர் ஒத்துழைப்பால் செய்யவேண்டியது. மேலும், இத்துறையில் நாம் மேற்கொண்டிருப் பது முதல் முயற்சி. குறைகளைக் கவனிக்காமல், இம்முயற்சியைப் பலகைகளிலும் பாராட்டி, மிகுந்த அன்புடன் உற்சாகம் ஊட்டிவரும் தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றி உரியது.

சென்னை.

மன்மத, தை 29.

தி.சு. அவினாசிலிங்கம்