பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

யம்மையைக் கண்டு வணங்கலாம். முன்னரே கூறியது போல் அம்மை நின்ற திருக்கோலத்தில் புதுமணப் பெண்ணாகவே காட்சி தருவாள். இந்தக் காந்திமதியம்மையின் திருக்கல்யாண மகோத்சவம் கண்கொள்ளாக் காட்சி. கதை நமக்குத் தெரிந்த கதைதான்.

அன்று கைலையில் இறைவன் இமவான் மகளான உமையைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கிறான். அந்தத் திருமணக் கோலங்காண மக்கள் தேவர் நாகர் எல்லாருமே கைலைக்குச் செல்கிறார்கள். அதனால் பாரம் தாங்கமாட்டாமல் தென்கோடு உயர்ந்து வடகோடு தாழ்கிறது. நாட்டைச் சமன் செய்ய இறைவன் அந்தக் குள்ள அகத்தியரையே தேர்ந்தெடுக்கிறான். அவரைத் தென்திசை செல்ல வேண்டுகிறான். அவரோ, நான் மட்டும் திருமணக் கோலம் காண வேண்டாமோ என்று சிணுங்குகிறார். அவரிடம் இறைவன் தாமே தென்திசை வந்து திருமணக் கோலத்தில் காட்சி கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதன் பின்னேதான் அகத்தியர் தென்திசை வருகிறார். பொதிகை வந்து தங்குகிறார். தென்திசையும் தாழ்ந்து நாடு சமநிலை எய்துகிறது. மணம் முடித்த புதிய தம்பதிகளாம் அந்த அமர காதலர்களிடையே ஒரு விளையாட்டு. அன்னை, அத்தனின் கண்களைப் பொத்தி யார் பொத்தியது என்று கேட்கிறாள். அண்ணலின் கண்கள் பொத்தப் பெற்ற காரணத்தால் அகில உலகமுமே இருளில் ஆழ்ந்து விடுகிறது. இந்தப் பழி அகல அன்னை கம்பை நதிக் கரையில் வந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி இறைவன் அங்கு எழுந்தருளிக் காட்சி தருகிறான். மணமும் செய்து கொண்டு அந்தத் திருமணக் கோலத்திலேயே அகத்தியர் முன்பு வந்து நின்றுவிடுகிறான். ஆனால், அந்தத் திருமண விழாவைத் திருநெல்வேலி அன்பர்கள் அதிலும் பெண் மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? அதைச் சொல்கிறார் ஒரு கவிஞர்.

வேணு வனத்து இறைவர் புது

மணம் விரும்பி, விளையாட்டாய் காணும் உமைப்பெயர் பொருந்தும்

காந்திமதிதனைக் கடிந்து காட்டுக்கு ஒட்டி தானும் அவள்பின் சென்று நயம் படித்து

பலர் சிரிக்க நலிவே உற்றால் வாள்நுதலும் அவர்பின்னே வருவதுவும் வியப்பாமோ? வசை ஒன்று இன்றி!