பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஜசம்ஹாரர்

கலை உலகிலே மிகப் பிரசித்திப்பெற்ற சிற்பம் மேலைநாட்டிலே உள்ள லாவக்கூன். ஒரு தந்தையையும் அவன் மக்கள் இருவரையும் இரண்டு மலைப்பாம்புகள் சுற்றிக்கொள்ள, அந்தப் பிடியிலிருந்து மீள தந்தையும் மக்களும் திருகிக்கொண்டு தவிக்கிறார்கள். உண்மையிலேயே அற்புதமான கிரேக்க நாட்டுச் சிற்பம் அது. அத்துடன் மைக்கேல் ஆஞ்சலோ உருவாக்கிய புதன் (Mercury) என்ற சிலையில் உள்ள முறுக்கிய நிலையையும் பாராட்டாத மேல் நாட்டுக் கலைஞர்கள் இல்லை. ஆனால் இவர்கள் எல்லாம் இந்தக் கலைக்கூடத்திற்கு வந்து, இந்த கஜசம்ஹாரரை மட்டும் பார்த்துவிட்டால், தாங்கள் போற்றும் சிற்ப வடிவங்கள் எல்லாம் இதற்கு ஈடாகுமா என்று எண்ணமாட்டார்களா? ஒரே சிலையில், ஒரு மூர்த்தியின் முன் பாகத்தையும் பின் பாகத்தையும் முறுக்கிக் காட்டும் ஆற்றல் பெற்றிருந்த சிற்பிகளுக்குத் தலைவனங்காதிருப்பார்களா?

கதை தெரிந்ததுதான். அறிவால் மாட்சி பெற்றிருந்த தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கப் புறப்படுகிறார் சிவபெருமான். அவர்களோ தங்கள் யாக பலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் ஆபிசார ஹோமம் நடத்துகிறார்கள். அதிலிருந்து எழுகின்றன பாம்பும் புலியும். பாம்பை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்கிறார். புலியை கிழித்து உடையாக அணிந்து கொள்கிறார். கடைசியில் பெரிய யானையையே ஏவுகிறார்கள் முனிவர்கள். யானையைச் சம்ஹரிப்பது என்பது எளிதான காரியமா? அதுவும் தன்னந்தனியனாக. ஆகவே ஆங்காரத்துடன் அந்த யானையின் உடலைக் கிழித்து, அதன் உடலுக்குள்ளேயே பாய்ந்து திருகிக்கொண்டு கஜசம்ஹாரத்தை நடத்தி முடிக்கிறார். இந்த நிலையை உருவாக்கிய சிற்பிகள் அநேகர். திருத்தருப்பூண்டி, பேருர் சிவன் கோயில்களில் எல்லாம் இந்தச் சிற்பம் உண்டு. ஆனால் இவைகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னாலேயே தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் இந்தச் சிற்பம் மிகவும் அழகாக உருவாகி இருக்கிறது. உடலில் உள்ள திருகலும், முகத்தில் உள்ள ஆங்காரமும் அற்புதமாக இருக்கிறது. அஞ்சி ஒதுங்கும் பார்வதியையும், அவள் கையில் உள்ள முருகனையும் உருவாக்கியிருக்கிறான் சிற்பி காணக்கண் கோடி வேண்டும். கோடி போதுமா, நேரம் எவ்வளவு யுகங்கள் வேண்டுமோ?