பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

ஞானசுந்தரம் கொடுத்த இன்னொரு சுவையான தகவல். தொ.மு.பா உள்படப் பலர் மாமல்லபுரச் சிற்பங்களை உருவாக்கியது நரசிம்ம பல்லவன் என்று எழுதுகிறார்கள். கல்கியின் எழுத்து வலிமையும் இதற்குக் காரணம். சிவகாமியின் சபதம் நினைவு இருக்கிறதா? ஆனால் அந்தச் சிற்பங்கள் அவனுக்குப் பின்வந்த ராஜசிம்ம பல்லவன்தான் உருவாக்கினான் என்பது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் நாகசாமியின் கருத்து.

அடுத்துப் பேசிய திரு. மஜீத் தற்போதைய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர். அவர் சுதைச் சிற்பங்களைப் பற்றியும், அவற்றில் மூலிகை எண்ணெய், வண்ணச் சுண்ணம் ஆகியவை எவ்வாறு உபயோகப்படுகின்றன என்றும் சுவையான தகவல்கள் தந்ததோடு, எவ்வாறு தொ.மு.பா. இப்படிப் பல நுட்பமான செய்திகளைத் திரட்டியிருக்கின்றார் என்றும் விளக்கினார்.

கடைசியாகப் பேசிய கல்கியின் புதல்வி திருமதி ஆனந்தி, கல்கியின் சாதனைகளில் குறிப்பிடத்தக்கவையாக, டி.கே.சியையும், தொ.மு.பாவையும், கம்பனைப் பற்றியும், கலைக் கோவில்களைப் பற்றியும் எழுத வைத்ததைச் சொன்னார். இவர் சொன்ன இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது. டி.கே.சி. ராஜாஜி, கல்கி, சோமு, மஹாராஜன், தொ.மு.பா போன்றோர் கலந்து உரையாடும் போதுதான் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றத்தால் புதிய சொற்கள் கூட உண்டாகும்.

ஆனந்தி சிறுமியாக இருக்கும்போது, குற்றால வட்டத்தொட்டியில் ஒருமுறை கலாசாரம் (Culture) என்ற சொல்லுக்குப் பதில் வேறு தமிழ் வார்த்தை என்ன என்ற சர்ச்சை எழுந்தது. டி.கே.சி பண்பு என்று சொன்னதை ராஜாஜி ஏற்கவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெய்ப்பாடு, வழிபாடு என்பது போன்று பண்பாடு என்று சொல் உருவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போதைய சினிமா, டி.வி பாதிப்பால் இப்படிப்பட்ட இலக்கிய சர்ச்சைக்கு நேரமில்லாமல் போகிறது. ஆனந்தி ஒரு நாலடியார் பாடலைத் தன் கருத்துக்குத் துணையாக அழைத்தார்.

“பகலரும் தொல் கேள்வி தன்மையுடையார்

இகல்இலர் எஃகுடையார் தம்முட்குழிஇ-நகலின்

இனிதாயின் காண்பாம் அகல் வானத்து

உம்பர் உறைவார் பதி”