பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 25;

நண்பர் தொண்டைமான் இதை நன்றாக அறிந்தவர். ஆகவேதான், இறைவனைத் தொட்டுத்தொட்டு விளையாடும் புராணக் கதைகளின் விதவிதமான உணர்ச்சிகளையெல்லாம், கனிவோடு, நகைச்சுவையோடு, அவரால் காண முடிகிறது. இதனால், ஏதோ இறைவனுக்குக் குறைவு வந்துவிடும் என்று அவர் எண்ணவில்லை.

‘கண்ணபுரமாலே கடவுளினுன் நீ அதிகம் உன்னிலுமோ யானதிகம்; ஒன்றுகேள்’

என்ற பாடல் நிந்தையில்லை. நிந்தாஸ்துதி என்பதை அவர் உணர்கிறார். இதுபோன்ற வேடிக்கையாகக் கடவுளைப் பற்றிப் பேசுவதெல்லாம், பக்தியின் முதிர்வினால் ஏற்படக் கூடும். அப்படித்தான் மனிதன் தன் முழு ஆற்றலையும், தன் வாழ்வு முழுவதையும் கடவுளை நோக்கித் திருப்ப முடியும் என்பதை அனுபவிக்கிறார், சொல்கிறார். உண்மையான பக்தியும் கவிதை உள்ளமும் படைத்தவர்களுக்கே இது கைகூடும்.

இவர்களில் ஒருவர் நண்பர் தொண்டைமான். அதோடு, தமது பேரறிவையும், தாம் பலகாலம் முயன்று சேர்த்த செய்திகளையும், கலை, தத்துவ, சமய துணுக்கங்களையும், நம்மோடு நேருக்கு நேர் நின்று பேசுகின்ற பாவனையில் பழகு தமிழில் அமைத்து விளம்புகிறார். தொண்டைமான் படைக்கும் வேங்கடம் முதல் குமரி வரை என்ற கட்டுரைத் தொடர், கலை, இலக்கியம், வரலாறு, பக்தி என்ற எல்லாம் விளங்கும் சுவை விருந்து, இந்த விருந்தே, நமது உள்ளக் குறைகளைப் போக்கும் அருமருந்தாகவும் அமைகிறது. இதனால்தான், தமிழகம் திரண்டு, இதை வரவேற்று மகிழ்கிறது. தமிழனுக்குத் தெரியாதா, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, சிறந்த பண்பாட்டோடும் பக்தியோடும் வாழ்ந்து வந்திருக்கும் அவனுக்குத் தெரியாதா, ள்தை எப்படிப் பாராட்டவேண்டும் என்று?

அ. சீநிவாசராகவன் பாரதி அகம் வ.உ.சி. கல்லூரி

துத்துக்குடி