பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O C (

எங்கள் தாத்தா

–-–

டாக்டர் உமா நடராஜன்

திருநெல்வேலி என்றவுடன் எல்லோருக்கும் இருட்டுக் கடை அல்வாதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், எனக்கோ எங்கள் தாத்தாவின் பூர்விகமான வீடுதான் நினைவுக்கு வரும். பழைய வீடுதான் என்றாலும் அந்த விரிந்த முற்றமும், பகலில் நல்ல சூரிய ஒளியும், இரவில் அண்ணாந்து பார்த்தால், இருண்ட வானில் கண்ணைச் சிமிட்டுகிற நட்சத்திரங்களும், வழுக்கும் கருங்கல் படிகளும், வர்ணம் பூசிய தூண்களுமாய் கொள்ளை அழகு அந்த வீடு. அந்த வீட்டின் கதாநாயகன் எங்கள் தாத்தாவோ அதை விட அழகு. கறுத்த நிறத்தவரைப் போய் அழகு என்று சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? இராமகாதையின் கதாநாயகன் இராமனை, கவிச்சக்கரவர்த்தியே, கருஞாயிறு என்றுதானே பாராட்டுகிறார். அதைப்போல எங்கள் தாத்தாவின் கருமை நிறமே ஒரு அழகு. அந்த வீட்டுக்கு ‘சித்ரகூடம் என்று பெயர் இட்ட நேர்த்தி அதைவிட அழகு. வீட்டின் பெயருக்கேற்ப, வீடு முழுக்க, அதுவும் வீட்டின் மாடி முழுக்க, அழகிய ஓவியங்களும் அழகிய சிற்ப வடிவங்களுமாய், தாத்தாவின் கலாரசனை தனி அழகு. அந்தப் பெரிய ஈசிச்சேரில் தாத்தா சாய்ந்தவாறு உட்கார்ந்து புத்தகம் படிப்பதே ஒரு அழகுதான்.

தான் ஒரு இலக்கியவாதி என்றோ, ஒரு நல்ல கலாரசிகர் என்றோ, ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றோ, பந்தா எதுவுமில்லாத அவர்களுடைய எளிமை மிகமிக அழகு. வெகுண்ட சொற்களோ, சினந்த செயல்களோ அறியாத அவருடைய பொறுமை அதைவிட அழகு. இப்போது நினைத்தாலும் அவர்களுடைய கள்ளம் கபடமற்ற வெள்ளைச் சிரிப்புத்தான் கண்முன் வருகிறது. பேரன் பேத்தியரிடத்தில் அவர்கள் வைத்திருந்த பாசமும் பரிவும், எல்லாவற்றுக்கும் மேல், எங்களையெல்லாம் கழுதை என்று விளிக்கும் அந்தச் சொல் வெகு அழகு.