பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

117


வரலாறு, வாழ்க்கை வரலாறு, பயணநூல்கள் இவற்றிலும் விருப்பம் உண்டாகும். பெண்பிள்ளைகள் சிறிது வேறுபட்ட வகையில் செய்யுள், நாடகம், பதினம் இவற்றில் விருப்பத்தைச் செலுத்துவர். சில நாட்களில் இருதிறத்தாரும் வாழ்க்கை முழுதும் சுவை தரும் ஒரே வகையான இலக்கியத்தில் நாட்டம் செலுத்துவர். ஏனவே, இப் பருவத்தில் இவர்களுக்கு நல்ல வழிகாட்டி, எக்காலத்திற்கும் எந்தாட்டிற்கும் உரிய சிறந்த உலக இலக்கியங்களில் சுவைதோன்றுமாறு ஊக்குவது நலம் பயக்கும்.

இப்பருவத்தில் பகுத்தறிவு வளர்கின்றது. மன உறுதி, அடக்கியாளும் விருப்பம், உலகுடனும் கடவுட் கொள்கையுடனும் நன்கு வாழ்தல் ஆகியவற்றில் நோக்கம் ஏற்படலாம். தன்னையடக்கும் ஆற்றல், எண்ணித்துணிதல் முதலியவற்றை மேற்கொள்ளுதல், உயரிய நோக்கம், நன்விருப்பப்படி நடக்க ஊக்கம், உறுதியான அறிவு, நன்னடத்தை இவை முக்கியமானவை. தூயதை அறிந்து அதன்படி நல்லொழுக்கத்தை மேற்கொள்ளுதல், சமயப்பற்று இவையும் வளரவேண்டும், இவற்றைப்பற்றி எடுத்துரைப்பதைவிட நடந்து காட்டல் வேண்டும். மேலும் கீழ்ப்படியாமை, தன்னை மிகமுக்கியமாக நினைத்தல், பிறர் தன்னைப் பாராட்ட விரும்புதல், மடிமை, ஊக்கமின்மை ஆகியவையும் இப் பருவத்தில் காணப்பெறலாம். பெற்றோர் விழிப்பாக இராவிடில் குற்றச் செயல்கள், தீய நடத்தை முதலானவை தோன்ற ஏதுவுண்டு.

சமூக முன்னேற்றம் : இப் பருவத்தில் சமூக மனப்பான்மையும் புத்துயிர் பெறுகின்றது. குடும்பம், பள்ளி இவற்றைப் பரந்த சமூகம் ஒன்றின் உறுப்பினர் என்று இப் பருவத்தினர் உணர்கின்றனர். புதிய ஊக்கங்களும், உறவுகளும், நோக்கங்களும் ஏற்படுகின்றன. சமூகத்தை நாடுதல், தம்மையொத்த வயதினருடன் சேரவிரும்புதல், கழகம் அமைத்தல், சமூகத்திற்காகத் தன்னை ஒடுக்கிக் கொள்ளுதல், சமூகத்திற்கும் சங்கத்திற்கும் பாடுபடுதல் ஆகியவை யாவும் தலைமை, நட்பு, பொறுப்பு, ஒத்துழைப்பு, தியாகம் ஆகியவற்றை வளர்க்கும். ஒத்துழைக்க விரும்புவதையும், பிறருக்குழைப்பதையும், பிறருடன் கூடிவாழ முன்வருவதையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்த வகையறியாமல் இவற்றை வீணேவிட்டால் இவை நெறிபிறழ்வான நடத்தைகளில் கொண்டுசெலுத்திவிடும். நன்கு பயன்படுத்தினால் சிறந்த பயனை அடையலாம். பெற்றோர்கள் தக்கவர்களின் சேர்க்கையை உண்டாக்கிக் கூடா நட்பை விலக்குதல் வேண்டும்.