பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும்

195


செய்தல் ஆகும். இதனைத் தனியே சற்று விரிவாக ஆராய்வோம்.

உயர்மடை மாற்றம்

கீழ்நிலைச் செயலை மேல்நிலைச் செயலாக மாற்றுவதே தூய்மை செய்தல் என்பது. இதனை உயர்மடை மாற்றம்'[1] என்றும் வழங்குவர். உள்ளக்கிளர்ச்சிகள் யாவும் தற்காப்பு நோக்குடையவை; நாகரிக வாழ்வில் அவை ஒன்றோடொன்று முரண்படுகின்றன. சமூக வாழ்க்கைக்கேற்ப அவற்றை நல் வழியில் மாற்ற வேண்டும். அஃதாவது, அவற்றின் இயல்பான நோக்கத்தை மாற்றியமைத்து அவற்றைத் திருப்தி செய்தல் வேண்டும். அவற்றை நசுக்கவும் செய்யாது, அவற்றிற்கு முழு உரிமையும் அளிக்காது மடைமாற்றி வேறு பயன்தரும் போக்கு களில் திருப்பி விடுதலே தூய்மை செய்தல்' என்பதற்கு முழு விளக்கம் ஆகும். ஃபிராய்டு கொள்கையினைப் பின்பற்று வோர் முதன் முதலில் இம்முறையினைக் காதலூக்கத்திற்கு மட்டிலும் மேற்கொண்டனர். ஆனால், நாளடைவில் பிற இயல்பூக்கங்களுக்கும் இது பயன்படுகின்றது. இயற்கை ஆற்றவை மனநிலை ஆற்றலாக ஆக்கும்பொழுது மக்கட் கூட்டம் விரும்பும் வகையில் மாற்றுதல் வேண்டும். இந்த ஆற்றலை மக்களுக்குப் பயன்படும் வழியில், படைப்பு நிலை ஆற்றலாக மாற்றுவதே நாகரிகத்தின் கடமையாகும். சில எடுத்துக் காட்டுகள் இதனைத் தெளிவாக்கும்.

போரெனப் புயங்கள் வீங்குவது தோள் வலியை வெளி யிடும் இயற்கையாற்றல். இதன் விளைவுகளைக் கடந்த இரண்டு போர்களிலும் கண்டோம். போரில் சென்று பாய்ந்து நாசவேலை செய்யும் இவ்வாற்றலை உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், சமூகச் சீர்திருத்தம், நாட்டில் நிலவும் எழுத்தறிவின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துச் சமாளிக்கும் வழியில் திருப்பலாம். இம்முறையில் போரூக்கம் சிறந்த முறையில் பயன் அளிக்கின்றது. சிறுவர்களிடம் இயல்பாகக் காணப் பெறுவது விடுப்பு[2]" அல்லது ஆராய்வூக்கம். எதையும் ஆராய வேண்டும் என்ற அவாவுடன் உள்ள சிறுவர்களைப் பிறர் பையில் கைபோடுதல், பிறருடைய அஞ்சற் கடிதங்களைப் படித்தல், கதவு இடுக்குகளின்மூலம் உற்றுப் பார்த்தல், உள்ளே பேசும் செய்திகளை மறைந்து நின்று ஒட்டுக் கேட்டல்


  1. 59. உயர்மடை மாற்றம்.Sublimation.
  2. 60,விடுப்பூக்கம்-Instinct of curiosity,