பக்கம்:கல்வி எனும் கண்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
கல்வி எனும் கண்
 

இத்துடன் கற்றவர் அஞ்சல் வழியே மேல் நிலைக் கல்வி பயலும் முறையினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லாதார் ஒருபுறம் இவ்வாறு கற்க, கற்றவர் மேலும் கற்க விரும்பும் நிலை வளர்ந்து வருகிறது. இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது பற்றி முன்னரே ஓரளவு கண்டோம். பல்கலைக் கழகப் பட்டப் படிப்பினையும் உயர்பட்டப் படிப்பினையும் அஞ்சல் வழியே கற்றுத் தருகின்றன. அதற்கென ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனித்துறையினையே அமைத்துப் பாடங்களைத் தயாரித்து அனுப்புகின்றன. ஒரு சில முறையாக இயங்க, சில தவறுகின்றன. பட்டம் பெற எண்ணிப் பல வகையில் கனவு காணும் பலர் அல்லலுறவும் காண்கிறோம். பாடங்களை முறையாக அனுப்புவதும் இடையிடையே குறித்த இடங்களில் பல ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்துவதும் முறையாக நடைபெறுகின்றன. பெரும்பாலும் பணிபுரியும் ஆடவரும் மகளிரும் இவற்றில் சேர்ந்து பயன்பெற விரும்புகின்றனர்; பெறுகின்றனர். எனினும் ஆய்ந்து கண்டவர்கள் இவர்கள் தரம் முறையாகப் பயிலுபவர் தரத்தினும் தாழ்ந்தே உள்ளது என்பர். ஆண்டொன்றுக்கு 80 நாள்கள் (நாளைக்கு 5 மணி நேரம்) நல்லாசிரியர்கள் கீழே அமர்ந்து பல்வேறு பாடங்களை முறையாகப் பயின்று, பருவ இடைத் தேர்வு, காலாண்டு,அரையாண்டுத் தேர்வுகள் எழுதி திருத்தப் பெற்று, தங்கள் தவறுகளை அவ்வப்போது உணர்ந்து திருந்தும் மாணவர்களோடு இவர்களை ஒப்பிடுவது பொருந்தாததுதான் எனினும் இவர்களும் முயன்று, பயின்று வெற்றி பெறுகின்றமை பாராட்டுதற்குரியதாகும். ஆயினும் ஒருசில பல்கலைக் கழகங்கள் பலரையும் தேர்ச்சியுறச் செய்தால்தான் நம் பல்கலைக் கழகத்துக்கு அதிக மாணவர் வருவர்-அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தவறுகள் இழைப்பதாகக் கேள்விப்படுகிறோம். மேலும் எங்கோ ஒருவர் பாடங்களைத் தயாரிக்க, வேறு எங்கோ