பக்கம்:கல்வி எனும் கண்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122
கல்வி எனும் கண்
 

1974இல் புதிய கல்வி முறை (10+2+3) புகுத்தியபோது மேநிலை வகுப்புகளில் (11 & 12) தொழில் பிரிவு என்று (Vocational Course) ஒன்று அமைக்கப்பெற்றது. அன்று அந்த மேநிலைப்பள்ளிக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தபோது, இதை வலியுறுத்திப் பல தொழில்களை ஏற்படுத்தி, ஒன்றினை மாணவர் பற்றிப் படர வழிவகுக்குமாறு கூறினேன். எனினும் அது கால கட்டத்தில் வெறும் தட்டச்சும் சுருக்கெழுத்தும் என்ற வகையில் அமைந்தது. அதிலும் பல மாணவர் பங்கு கொண்டனர். 1987-88 மேநிலை வகுப்பில் பயின்ற சுமார் 3.5 இலட்சம் மாணவரில் 96,000 பேர் (24%) இந்தத் தொழிற்கல்வி பயின்றார் என அரசாங்கக் கணக்கு தரப்பெறுகின்றது. எனினும் இதில் பயில்பவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லாத நிலை உண்டாயிற்று. கல்லூரியில் சேர்க்கும் மாணவரில் நூற்றுக்குப் பத்து மாணவரையே சேர்க்க விதி அமைத்தனர் போலும். பல கல்லூரிகள் அதையும் பின்பற்றுவதில்லை. எனவே அதன் வளர்ச்சியும் தடைப்பட்டது எனலாம். நான் முன்னரே காட்டியபடி இவர்களை அரசாங்க எழுத்தர் பதவிக்கு முதனிலை தந்து எடுத்துக் கொள்ளல் பொருந்துவதாகும். இப்படியே இம்மேநிலை வகுப்புகளில் ஆசிரியர் பயிற்சி வகுப்பும் இருந்தது. அதில் பயின்றவர்களை-மேலும் அத்துறையிலேயே ஓராண்டு ஈராண்டு பயிற்சி பெறச்செய்து, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வழி செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர்களும் நாற்சந்தியில் நின்று நலிய வேண்டி வந்தமையின் அந்தத் துறையும் அண்மையில் மூடப்பட்டது என அறிகிறேன். இவ்வாறு ஆக்க நெறிக்கென வகுக்கப்பெற்ற பாதைகள் அரசாங்க ஊக்குதல் இல்லாத காரணத்தினாலேயே அழிக்கப்படும் ஓர் அவலநிலை நாட்டில், காண வருந்த வேண்டியுள்ளது. தொழிற்கல்வி என்றால் ஏதோ பொறியியல், மருத்துவம் இவற்றின் அடிப்படையில் அமைந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிலுதல் என்றே நினைத்திருக்கிறோம். சாதாரண குடிசைத் தொழில்களுக்கும்