பக்கம்:கல்வி எனும் கண்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

27


பகுதிகளோடு போட்டியிட முடியாது. இன்று தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியில் பாதிக்குமேல் தமிழ் அறியாதவர்களாகவே உள்ளமைக்கும், கோட்டையில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் பயிலாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். தில்லி மத்திய அரசாங்கத்திலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எத்துறையில் சென்றாலும் தமிழரைப் பெரும்பாலும் காணமுடியும். அவர்களும் இங்கிருந்து செல்வோரை அன்புடன் ஏற்று ஆவன செய்து உதவினர். இன்று அங்கேயும் தமிழனைக் காண்பதரிது. ஏன் இந்த அவல நிலை? இதைத் திருத்த வேண்டாமா?

நான் ஆங்கிலத்தையோ இந்தியையோ வேற்று மொழியையோ நம் மாணவர் கற்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ‘தாய்க் கொலைச் சால்புடைத்து என்பாரும் உண்டு’ என்று முன்னைப் பெரியவர்கள் கூறியது போன்று தாய்மொழியைக் கொலைசெய்துவிட்டு வேற்றுமொழியினை ‘ஓம்பு’தல் தவறு எனவே சுட்டிக்காட்டினேன். தமிழோடு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கலாம் தமிழன் அத்துணை அறிவும் ஆற்றலும் திறனும் பெற்றவன். இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழுக்குத் தமிழ்நாட்டில் முதலிடம் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்! இது புதிதன்று. இப்படியே பல மாநிலங்களில்-உலகில் பல நாடுகள் உள்ள நிலையினை அறியவேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருசில ஆண்டுகளுக்குள் ஆங்கிலம் பயிற்றுவிக்க அடிக்கடி விதிகள் மாற்றப்பெற்றன. ஒருமுறை ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் தொடங்கினால் போதும் என்றும், ஒரு முறை மூன்று அல்லது நான்காம் வகுப்பில் தொடங்கினால் போதும் என்றும் அரசு ஆணையிட்டதாக அறிகிறேன். அந்தக் காலத்தில்தான் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மூலைக் கொன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. அந்தோ ஆங்கிலம் இல்லையா? என்று ஒன்றும் அறியாக் கிராமவாசிகள் உள்பட, ஆங்கிலப் பள்ளி எங்கே எங்கே என்று தேடி அவற்றுள் தம்