பக்கம்:கல்வி எனும் கண்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்வி எனும் கண்
33
 

நாட்டு நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பின் உண்மை விளங்கும். தற்போது புதிய வேகத்தில் மாவட்டந்தோறும் இந்த முயற்சி செயலாக்கப்பெறுகின்றது. ‘எழுத்தறியார் இந்த மாவட்டத்தில் இல்லையாகச் செய்வோம்’ என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் அவரைச் சார்ந்தோர்களும் முயல்கின்றனர். எனினும் மக்கள் ஒத்துழைப்புத் தேவை. அதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும். எல்லாரும் கற்றோரே என்ற நிலை நாட்டில் மலரின் அந்தநாள் நன்னாளாகும் என்பது உண்மை! ஆனால் அந்நாள் என்று வருமோ!

இலவசக் கல்வி பற்றியும் சற்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஆரம்பப்பள்ளி வகுப்புகள் ஐந்தாம் வகுப்புவரை எங்கும் இலவசமாகவே இயங்கின. ஒருசில தனியார்-கிறித்தவர் பள்ளிகள் போன்றவை மிகக் குறைந்த அளவில் சம்பளம் பெற்றன. பள்ளியில் மத்திய வகுப்புகளிலும் (6, 7, 8) மேல் வகுப்புகளிலும் (9, 10, 11) மிகக் குறைவாகவே சம்பளம் பெற்றனர். கல்லூரிகளிலும் அப்படியே. இன்று மேநிலைப்பள்ளி வரையில் கல்வி இலவசமாக்கப்பெற்றுள்ளது. ‘இது தேவைதானா’ என்ற வினா பலர் உள்ளத்தில் எழுகின்றது. ஏழைகளுக்கு உதவ அன்றும் சென்னைக் கல்வி விதிகளில் 72இல் தனிவிதி இருந்தது. அக்குறைந்த சம்பளத்தையும் அவர்கள் கட்டவேண்டியதில்லை. அப்போது இருந்த தரம் இன்று கல்வியில் இல்லை. பல பெற்றோர் பணம் செலவில்லையாதலால் பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாடெங்கும் இலவசப் பள்ளிகள் இருக்கும்போது, நூறும் இருநூறும் மாதச்சம்பளமும் பெற்று, சேர்க்கும்போது சில ஆயிரங்களும் நன்கொடை வாங்கும் பிற பள்ளிகள் வளர்வதற்குரிய காரணத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். பல ஏழைகளும் கூட, பிற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சம்பளம் கட்டும் பள்ளிகளுக்கே பிள்ளைகளை அனுப்பக் காண்கிறோம். ‘எனவே இலவசக் கல்வி எனில் தரம் குறைந்தது’ என்று