பக்கம்:கல்வி எனும் கண்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
கல்வி எனும் கண்
 

னர். (பின் அப்பையனுக்கு அவர் ஒரு கல்லூரியில் இடமளித்தார்). இந்த நிலையில் எத்தனை ஆயிரம் கோடி கல்விக்குச் செலவு செய்தால்தான் என்ன பயன்? எனவே இப்பேரேரியிலிருந்து பிரியும் பல கால்வாய்களைச்-சிற்றாறுகளைச் செம்மைப்படுத்தி, வழி வகுத்து, அவை வற்றாவகையில் பாதுகாத்தால் நாட்டுக்கு வேண்டிய நல்ல பயன்-வாழ்வுக்குத் தேவையான பயிர்-சமுதாயத்தை வாழ வைக்கும் தகுதியான பயிர் விளையுமே. எனவே இந்தப் பேரேரியை முதலில் தூறு எடுத்துத் தூய்மையாக்கி, அதனைப் பகுத்து உரிய ஆறுகளையும் கால்வாய்களையும் செம்மைப்படுத்தி, மதகினை ஒழுங்குற அமைத்து, தேவையறிந்து திறந்துவிட்டு, பயிரின் களையைப் போக்கி, எருவிட்டுக் காத்தால் நாடு நாடாகும். நம் தமிழ் நாடே பாரதத்தில்-பரந்த உலகில் உயரிய முதல் நாடாகத் திகழும்.

எனவே இந்த அடிப்படையிலே ‘+2’ வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டங்களை அமைக்க வழிகண்டு, அதற்கேற்ற வகையில் நல்ல வல்லவர் குழுக்களை அமைத்து உடன் அரசாங்கம் ஆவன காணவேண்டும். 1992 சூனில் தொடங்கும் வகுப்புகளுக்கே இத்தகைய முறையினைச் செயலாக்க வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் உடன் செயலாற்ற வேண்டும்.

இதற்கென நல்லாசிரியர்கள்-தம்மை மறந்து உழைக்கின்ற-அவரவர் பாடங்களின் திறன் பெற்ற வல்லாசிரியர்கள் தேவை. யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை மாறி, பிள்ளைகளை-வளரும் சமுதாயத்தை வாழவைக்கும் வகையில் செயலாற்றும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்னூலில் பவணந்தியார் காட்டிய ஆசிரியர் இலக்கண அமைதி பெற்றவராய், ஆங்கிலத்தில் கோல்டு ஸ்மித் (Goldsmith) காட்டிய ஆசிரிய மரபினைப் பெற்றவராய் உள்ளவர்கள் ஆசிரியர்களாய் அமைந்தாலன்றி எந்தச் சீர்திருத்தமும் சிறக்காது. எனவே இப்பேரேரியாகிய ‘+2’ எனும் கல்வியை நல்லவர் துணைக் கொண்டு உடன்