பக்கம்:களத்துமேடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

121


இந்தத் துப்பும் மர்மமும் அந்தக் குளத்துக்கே புரியாமலிருக்கையில், அங்குக் குளிக்க வந்த பெண்டுகளுக்கு மட்டும் புரிந்துவிடுமா?

போனதும் வந்ததுமாகத் திரும்பி விட வேண்டுமென்ற நோக்கத்துடன் தான் தைலம்மை குளிக்க வந்தாள். மேல் சவுக்காரப் பெட்டியும் கொணர்ந்திருந்தாள். அப்பன்காரவுக பசி பொறுக்கமாட்டாக, வயல் காட்டிலேருந்து திரும்பினதும், என்னைக் காணாட்டி, அவுகளுக்கு மூக்குமேல் கோபம் பொத்துக்கிட்டு ஒடியாரும், அயித்தை மகனுக்கும் கஞ்சி வார்க்கணும். அவுகளே காலம்பறச் சொல்லிப் புட்டாங்க, எங்கையாலே கஞ்சிகுடிக்க வேணும்னு!...ஆனபடியினாலே, சுருக்கணத் திரும்பிப்புடனும்,' என்ற கட்டுப்பாட்டுடன் குளத்தில் இறங்கினாள். உடன் வந்தாள் பொன்னாத்தா. அவள் பிள்ளைக்குட்டிக்காசி. அபூர்வமாகக் குளிப்பவள் அவள். அவள் வெய்யிலைக் கண்டுதான் தலையைக் கொடுப்பாள், தண்ணிரிடம். சளசளவென்ற பேச்சுக்காரி அவள். ஆனாலும் தைலம்மையோடு துணைவந்ததால்,இதம் பதமாக அனுசரித்து நடப்பதில் கருத்துக்கொண்டவள்.அவள். அவளும் பிள்ளையின் சட்டையைக் கசக்க ஆரம்பித்து விட்டாள்.

தைலி ரவிக்கையை அவிழ்த்து, உள் பாவாடையை மார்புக்குமேலாக உயர்த்தி இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, புடவையை நனைத்தாள்.

அது தருணம், "சொகமா தைலி?" என்று குசலம் விசாரித்தாள் காத்தாயி. பட்டணக்கரையிலிருந்து மாசிமகத் திருநாளைக்காகத் தாய்வீட்டுக்கு விருந்தாடி வந்திருந்தாள் அவள்.

"ஆமா, அக்கா. நீ, உம் புருசன் எல்லாம் சொகந்தானே?" என்று பதிலுக்கு க்ஷேமலாபம் கோரினாள் தைலம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/128&oldid=1386330" இலிருந்து மீள்விக்கப்பட்டது