பக்கம்:களத்துமேடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

களத்து மேடு

லேருந்து எம் பொழைப்பு எப்படி எப்படி கமுக்கமாய் நாறிப் போயிருச்சு? ‘...தாரை தாரையாக வழிந்தது விழிவெள்ளம். கொட்டுமேளம் முழங்க, தாரை தம்பட்டம், கொம்பு முழக்கத்தாம் முத்தாயியின் தங்கக்கழுத்தில் தங்கத்தாலி கட்டித் திருப்பூட்டிய அந்தச் சுபயோக சுபதினத்தை எப்படி விழுங்கி ஏப்பமிட்டுவிட்டன. இந்த முப்பத்தாறு வருஷங்கள்! ‘முத்தாயி! நீ உசிரோட இருந்திருந்தாக்க, நமக்கு–எனக்கு அறுபதாம் கண்ணாலமும் எப்பவோ நடந்திருக்குமே!’ நெஞ்சைத் தொட்டு உலுக்கிய சுடுநீரின் மென்னுணர்வு அவரைச் சுய சிந்தனைக்கு உள்ளாக்கியது போலும் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளச் சிந்தை மறந்தது; ஆனால் குடுமியைத் தட்டி முடிந்து கொள்ள மட்டும் மறக்கவில்லை. கற்றாழை நார் இழைகளாக முடிகள் சிதறிப் பிசிறுதட்டியிருந்தன.

வாசலில் காலடியோசை கேட்டது.

‘விசுக்’ கென்று கண்களை லேஞ்சினால் துடைத்துக் கொண்டார் செங்காளியப்பன் சேர்வை. கை விளக்கை நிலைப்படிக்கு வசமாகத் தள்ளி நகர்த்திவிட்டு, திண்டில் சாய்ந்தார். வெற்றிலைக் குட்டான் பாய் இடுக்கில் பதுங்கியது. சாய்ந்தபடி, பார்வையைத் திசை மலர்த்திய அவர், தைலம்மையைக் கண்டதும், எழுந்து உட்கார்ந்து கொண்டார். செல்லாயியின் முடிவு தம்முள் உண்டாக்கிய அந்த அதிசய மயக்க நிலையை எண்ணமிட்டவராக, அவர் முதுகை வளைத்து நெட்டி பறித்துக் கொண்டார்; நீட்டியிருந்த கால்களை மடக்கிக் கொண்டார்.

அதோ, வந்துவிட்டாள் தைலம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/97&oldid=1386417" இலிருந்து மீள்விக்கப்பட்டது