பக்கம்:கழுமலப்போர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நிறைவேறும் என்று நம்பினான். உடனே கழுமலக் கோட்டைக் காவலர்களாக விளங்கும், அத்தி, ஏற்றை, கங்கன், நன்னன், புன்துறை என்ற படைத் தலைவர்களோடு இவனையும் ஒன்றுபடுத்தி உயர்வு செய்தான். சேரர் படையில் சேர்ந்து பணியாற்றும் பேறு கட்டிக்குக் கிடைத்தது.

சேரநாட்டின் உட்புகுந்து, அச்சேரர்க்குரிய கழுமலக் கோட்டையைக் காத்து நின்ற படைத் தலைவர் அறுவரையும் வென்று, அவர் படைகள் ஆறினையும் அழித்து வெற்றி கண்ட சோழர் படைமுதலி பழையன் என்பவனாவன். சோழ நாட்டிற்கு வாழ்வும் வளமும் அளிப்பது காவிரியாறு. அக்காவிரியாற்றின் கரைக்கண் தோன்றிப் பெருமை பெற்ற பேரூர்கள் பல. அவற்றுள் ஒன்று போஓர் என ஒவிக்கப் பெறும் போரூர். ஆங்கு ஓடும் காவிரியின் ஆழத்தை அளந்து காணமுடியாது. ஓடக்கோலும் ஆழ்ந்து போகும் அவ்வளவு ஆழம் உடையது அவ்வாறு. பெருகி ஓடும் அக்காவிரியாற்று நீரை அவ்வூர் மக்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். காவிரியாற்றிலிருந்து கால்வாய்கள் பல வெட்டி வைத்திருந்தார்கள்; எங்கு நோக்கினும் நீர் நிறைந்து ஓடும் மதகுகளே காட்சி தரும். இவ்வாறு காவிரியாற்றுப் புனலைப் பயன் கொண்டமையால், அவ்வூரைச் சூழ எங்கும் தென்னஞ் சோலைகளும் வாழைத் தோட்டங்களுமே காட்சி அளித்தன.

இத்தகைய வளமிக்க போரூரில் வாழ்ந்திருந்தான் பழையன். பழையன் ஒரு பெரிய வீரன்; பெரிய படைக்குத் தலைவனுமாவன். அவன் ஒரு சிறந்த வில்வீரன்; அவன் கை வில்லிலிருந்து அம்புகள் மழைத் தாரைகளென, மளமளவென வெளிப்பட்டு, பகைவர் படையைச் சிதறடிக்கும் சிறப்புடையன. வேல் ஏந்திப் போர் புரிவதிலும் அவன் வல்லவன், வலக்கையில் வேலும், இடக்கையில் பகைவர் ஏவும் படைக்கலங்களைத் தடுக்கும் தோலும் ஏந்திக் களம் புகுந்துவிட்டால் அவன் வெற்றி பெறாது வீடு திரும்பான். அவன் வீசும் வேல், சிறிதும் குறிதவறாது சென்று பாய்ந்து பகைவர் உயிரைப் பாழ்பண்ணும். அவ்வளவு சிறந்த போர்ப்பயிற்சி பெற்றிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/44&oldid=1359826" இலிருந்து மீள்விக்கப்பட்டது