உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிர் காத்த கோவூர்கிழார்

25


கேட்டு மகிழ்வான். பொன்னை வாரி வழங்குவான். யானை, குதிரை, தேர் ஆகியவற்றைக் கொடுப்பான், இப்படிக் கணக்கில்லாத தேர்களைப் புலவர்களுக்குக் கொடுத்ததனால் ‘தேர்வண் மலையன்’ என்று அவர்கள் அவனைப் பாராட்டினார்கள். தேர் வழங்கும் வள்ளன்மையை உடைய மலையமான் என்பது அதற்குப் பொருள்.

மலையமான் திருமுடிக்காரியின் துணையைப் பெறாத அரசர்கள் அவன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். அக்காலத்தில் உறையூரில் இருந்து, அரசு செலுத்திய சோழனுக்குக் கிள்ளி வளவன் என்று பெயர். அவன் இரண்டொரு சமயங்களில் மலையமானுடைய உதவியைப் பெற நினைந்தான். அவனால் பெற முடியவில்லை. அதனால் அவனுக்குக் காரியினிடம் கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபம் காரியை என்ன செய்ய முடியும்!

திருமுடிக்காரி இறந்துவிட்டான். அந்தச் செய்தியைக் கேட்டுத் துடிதுடித்துப்போனார்கள் புலவர்கள், தன்னுடைய வீரத்தால் புலமையை வளர்த்த பெருமான் அல்லவா அவன்! புலவர்களுக்கு உதவி புரியாத மன்னர்களிடமும் தன் படையை உதவி, பொருள் பெற்றுப் புலவர்களுக்கு ஈந்த வள்ளல் அவன். அவனால் பல போர்களில் வெற்றி பெற்ற மன்னர்களும் அவனுடைய மறைவை அறிந்து, துயரடைந்தார்கள்.

இத்தனை பேர்களுக்கிடையே, ‘மலையமான் தொலைந்தான்’ என்று மகிழ்ச்சி அடைந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் கிள்ளிவளவனும் ஒருவன். ‘இனிமேல் மலையமானுடைய படை நம்மை எதிர்த்தால் என்ன செய்வது என்ற ஏக்கம் எந்த அரசருக்கும் உண்டாகாது. அவரவர்களுடைய சொந்த வீரத்துக்குத் தக்கபடி வெற்றி தோல்வி அமையும்’ என்று சொல்லி மகிழ்ந்தான்.

“அவனுக்குக் குழந்தை குட்டிகள் உண்டோ ?” - என்று விசாரித்தான் வளவன்.

“இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்” என்று அமைச்சன் ஒருவன் சொன்னான்.

“அப்படியா? அந்தப் பாம்புக்குக் குட்டிகளும் இருக்கின்றனவா?” என்று சொல்லும்போது அவன் குரலின் வன்மை குறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/27&oldid=1525742" இலிருந்து மீள்விக்கப்பட்டது