பக்கம்:கவிஞர் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கவிஞர் கதை



“அவன் ஊர் எது?”

“எங்கே பார்த்தாலும் வயல்கள் பரந்து கிடக்கும் சோழ நாட்டுக்கு உரியவன் அவன். உறையூரிலிருந்து யானை அவனை இங்கே தூக்கிக்கொண்டு வந்துவிட்டது.”

“அப்படியென்றால் இவன் சோழ... ... ”

“ஆம்; சோழ அரசன் கோப்பெருநற்கிள்ளிதான்!”

சேரன் நிமிர்ந்து நின்று பார்த்தான். சற்றே கனைத்துக் கொண்டான். “உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமா?” என்றான்.

“உறையூர்காரனுக்குத் தெரியாதா? இவன் கருவூருக்குள் முறை தவறி வரக்கூடியவன் அல்ல. யமன்கையில் பட்ட உயிரைப்போல இந்த யானையினிடம் அகப்பட்டுக்கொண்டான். சேர மன்னனுடைய எல்லைக்குள்ளே வந்துவிட்ட செய்தியை அவன் அறிந்தானோ அறியவில்லையோ? யான் அறியேன். ஏதோ அவனுக்குப் போதாத காலம்! நல்ல வேளையாக இப்போது மன்னர் பெருமான் இங்கே நின்று, இவனைப் பார்க்கும் சமயமாக இருக்கிறது. வஞ்சிமா நகரத்தில் தாங்கள் இருக்கும்போது இப்படி நேர்ந்தால் இவனை இங்குள்ள அதிகாரிகள் எளிதில் விட்டுவிடுவார்களா? தம்முடைய ஆற்றலுக்கு உட்படாத இத்தகைய சந்தர்ப்பம் ஒவ்வொரு வாழ்க்கையிலும் நிகழ்வது உண்டு. அப்படி நேரும்போது, மற்றவர்கள் பெருந்தன்மையோடு நடந்துகொண்டால் அந்தச் சமயங்களில் கேடு இல்லாமல் தப்பலாம். சோழன் யாதொரு கேடும் இன்றி, ஊருக்குத் திரும்பிப் போய்ச் சேருவான் என்றே நான் நம்புகிறேன்” என்று பேசி முடித்தார் மோசியார்.

புலவருடைய குறிப்பை அந்துவஞ்சேரல் உணர்ந்துகொண்டான். அவனே வரவேற்றான். அவனுடன் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் இருந்து, புன்னகையுடன் வரவேற்றார்,

‘அயல் நாட்டுக்குள் முறையின்றி வந்துவிட்டோமே! என்ன ஆகுமோ!’ என்று அஞ்சிக் கிடந்த சோழனுக்கு, முடமோசியாரைக் கண்டவுடன் உயிர் வந்தது.

ஒரு நாள் சேரனுடைய விருந்தாளியாக இருந்த சோழன். மறுநாளே, உறையூர் போய்ச் சேர்ந்தான். சேர்ந்தது முதல், ‘முடமோசியார் எப்போது வருவார், எப்போது வருவார். எப் போது வருவார்?’ என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான். அவரால் உயிர் பிழைத்தவன் அல்லவா? தன் நன்றியறிவைக் காட்ட வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/38&oldid=1525779" இலிருந்து மீள்விக்கப்பட்டது