பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

5. கவிதை நலன்


கவிதைக்கும் கவிஞருக்கும் உள்ள தொடர்பையும், கவிதை கலையாவதென்பதெப்படி என்பதையும் மேலே கண்டோம். அக்கவிதை, கலைஞர் உண்டாக்கிய ஒன்று. ‘கவிஞர் நல் உள்ளத்தால் தீட்டிய உயிரோவியம் கவிதை எனினும், கவிதை கவிஞருக்கு அடிமையா, அன்றி உடைமையா?’ என்ற கேள்விக்கு விடை காணுவது அவ்வளவு எளிதன்று. 'கவிதை, தன்னைப் படைப்பவன்மேல் ஆதிக்கம் செலுத்துகின்றதா? அல்லது அவன் வழியேதான் தலை சாய்த்து நடக்கின்றதா?’ என்பது ஆராய வேண்டிய ஒன்றுதான். சாதாரணமாகக் கவிஞன் கவிகளை இயற்றுவதனால், அவன், அவற்றை அடக்கியாளும் திறமையில் வல்லவன் என்றுதான் கொள்ளத்தோன்றும். மோட்டார் வண்டியைச் செய்தவன் ஒருவன், அதன் தலைவனாய் இருந்து, அதைச் செலுத்துகின்றவனாகி, அதைத் தனது விருப்பம் போலவெல்லாம் செலுத்த முடியும். அதுபோன்றே கவிஞனும் தன் விருப்பம் போலெல்லாம் கவிதையை ஈர்த்துச் செல்லமுடியும் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆயினும் கவிதை அத்துணை எளிமையில் அமைந்துவிடும் பொருளாக இல்லை. மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள், ‘கவிதை, கலைஞனுக்கு மேற்பட்டது; அவனை அடக்கியாள்வது; அவனை அடிபணிய வைப்பது’, என்றுதான் கூறிச் செல்கின்றார்கள். பிராட்லி என்ற ஆங்கில ஆய்வாளர், ‘கவிதை நம் பணியாளன்று; அது நம் தலைவன்’, என்கிறார்.[1] மற்றொரு புலவராகிய கிளட்டன் புரூக் என்பவர், கலை நம் நீதிபதி என்கிறார்.[2] எனவே, கவிதை மனிதனல் ஆக்கப்-


  1. Poetry for Poetry sake, by A C. Bradly, M. A.,LLD.
  2. Essays, Literature and Life, by A Clutton-Brook