பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கவிதையும் வாழ்க்கையும்


என்பது அரசரைப்பற்றியது மட்டுமாகாது. 'அரசரே உலகுக்கு ஆணி' என்ற மனப்பான்மை இடைக்காலத்தில், நாட்டில்- உலகில் - சிறந்தோங்கியிருந்தது. நம் தமிழ் நாட்டிலுங்கூட அத்தகைய எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது என்னலாம். எனினும், அந்தக் காலத்திற்கூட, அரசன் நாட்டு மக்களை மதித்தே நடந்து வந்தான் என்பதைக் காண்கின்றோம். எனவே, வரலாறு நாட்டு மக்களின் - உலக உயிர்களின் - அடிப்படையிலிருந்து எழுதப் பெறவேண்டும்.

உலக அரங்கங்களில் நடக்கும் போர்களே முக்கியமாக, வரலாற்றுக்கு உட்பட்ட காலம் என்றும், வரலாற்றுக்கு முந்திய காலமென்றும் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்துக்கொண்டு, தத்தம் நூல்களை எழுதியுள்ளார்கள். வரலாற்றுக் காலம் என்று அவர்கள் சொல்லும் எல்லை ஒரு சில ஆயிரம் ஆண்டுகளையே தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், அது வரலாற்று எல்லையை வரையறுக்க முடியாத ஒன்று. உயிர்த் தோற்றமும் உலகத் தோற்றமும் உண்டான காலத்திலிருந்தே வரலாறு எழுதப் பெறல் வேண்டும். அப்போது வரலாற்று நிலையே வேறுவகையில் அமையும். இந்த உணர்ச்சி இக்கால உலகில் தோன்றி வளர்ந்து வருகின்றது. நம் நாட்டுப்பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் படித்த வரலாற்று நூல்களுக்கும், இன்றைய நூல்களுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. அரச பரம்பரைகளைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை, போர் முறை, பிறசெயல்கள் பற்றியும் எழுதப்பெற்ற வரலாற்று நூல்கள் இன்று நாட்டில் இடம் பெறவில்லை. அதற்குப் பதில் மக்கள் சமுதாய வாழ்வையே அடிப்படையாகக் கொண்டு, அவர்தம் சமூகத்தை வரலாற்றுவழி ஆய்ந்து எழுதும் சமூக நூல்களாகிய வரலாற்று நூல்களே இடம் பெற்றமையை நாம் அறியலாம். இந்த நிலை இன்னும் சற்றே விரிவடைய வேண்டுமென்பதே நம் நோக்கம்.

வரலாறு பற்றியும் நிலம் பற்றியும் ஆய்வு நூல்கள் வந்து கொண்டே யிருக்கின்றன. 'பரந்த அண்ட கோளத்தின்