பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

179



அறிவை ஆறாகப் பகுத்தார்கள். உயிர்கள், உலகில் காணும் அல்லது நிலவும் பொருள்களைத் துய்த்தற்கே இங்கே பிறக்கின்றன எனக் கூறலாம். இவ்வுலகிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அவ்வாறு விளக்க இயலும். இவ்வுலகில் உள்ள பொருள்களையெல்லாம் துய்த்து இன்பம் பெறுதல் எல்லா உயிருக்கும் இயற்கை என்பதை மேலே கண்டோம். எனவே, இவ்வுலகைத் தமக்காகப் பயன்படுத்துவதே இதில் வந்து பிறந்த உயிர்களின் நோக்கம் என்பது புலப்படும். அதுவே வாழ்க்கையாக அமைகின்றது. அப்படித் துய்ப்பதற்கு ஐம்புல நுகர்ச்சி என்பது பெயர். 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களின் அறிவையே உயிர்கள் பெறுகின்றன என்பர். கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், வாயால் உண்பதும், மூக்கால் முகர்வதும், உடலால் உற்று அறிவதும் உயிர்கட்கு இயற்கை. இவை ஐந்தும் படிப்படியாக உயிர்வளர்ச்சியிலே ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துகொண்டே வருகின்றன. ஆனால், ஆறாவதாகிய மனிதன் பெற்ற அறிவு தனிப்பட்டது போலும்! அந்த ஆறாவது அறிவைத் தொல்காப்பியர் 'மனம்' எனக் குறிக்கின்றார். மனம் என்ற அறிவு, மற்ற உயிர்களுக்கு இல்லாத ஒன்று; மனிதனிடத்தில் இருக்கிறது. 'மனம் அறியச் சொல்' என்று சாதாரணமாகக் கேட்பதை அறிவோம். 'தன் நெஞ்சு, அறிவது பொய்யற்க' என்பார் திருவள்ளுவர். இம்மன அறிவு யாவற்றினும் சிறந்த ஒன்று. நல்லதன் நலனையும் அல்லதன் தீமையையும் ஆராய்ந்து அறிந்து, மக்களை நேரிய வழியில் செலுத்தப் பயன்படுவதே மன அறிவாகும். இவ்வறிவு மற்ற உயிர்களிடத்து இன்மையின், அவற்றினும் வேறாக மனிதனைப் பிரித்து, அவனை உயர்திணை யாக்கினார். இம்மன அறிவின் வழியேதான் மனிதன் இன்று தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் ஆராய்கின்றான். மற்றவை அவ்வாறு ஆராய்ச்சி செய்ய இயலாது. ஆயினும், இம் மன அறிவு பெற்ற மனிதப் பிறவியைப் பெறுமுன் மனித நிலை பெற்ற இந்த உயிர், எத்தனை எத்தனை கோடி ஆண்டுகள்