பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

181


அவற்றின் கிளைப்பெயரும் பிறவும் மரபு பற்றி எவ்வெவ்வாறு வழங்குகின்றன என்பதைக் காட்டுகின்றார். இத்துணை நுண்ணிதாக எடுத்துக்காட்டும் இயல்பு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார், உயிர் பற்றிய நுணுக்கங்களையும் ஆராய்ந்து வெளியிடுகின்றார். அறிவு எவை எவை என்பதை,


“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே;
இரண்டறி வதுவே அதனொடு நாவே;
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே;
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே;
ஐந்தறி வதுவே அவற்றெடு செவியே;
ஆறறி வதுவே அவற்றெடு மனனே;
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.”
(மரபு: 27)

என்று காட்டுவது நோக்கத்தக்கது. எனவே, அறிவுகள் ஆறும் ஒன்றை ஒன்று எவ்வாறு பற்றிக்கொண்டு வளர்ச்சி அடை கின்றன என்பது தெரிகின்றது. உடலால் உற்றறிவதே முதலறிவென்பதும், அதனொடு பொருந்தும் நாவின் அறிவே இரண்டாவ தறிவென்பதும், பின்பு மூக்கறிவும், கண் அறிவும், செவி அறிவும், இறுதியாக மன அறிவும் ஒன்றோடொன்று பொருந்தியே உயிர் வளர்ச்சி ஊற்றம்பெற்று உயர உதவுகின்றன என்பதும் நன்கு புலனாகின்றன. முதல் ஐயறிவுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறுகின்ற இன்பத்தைத் துய்ப்பவனே உலகில் வாழும் தன்மையன் என்பது ஆன்றோர் கருத்து. அவற்றில் செல்லும் அந்த நெறியைச் செம்மைப் படுத்த உதவுவதுதான் மன அறிவாகும். இவ்வாறு ஐம்புலனும் பெறும் இன்பத்தைப் பெயரிட்டு வழங்கியிருக்கின்றனர். ‘சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்’ என்ற ஐந்துவகை உணர்வுகளே இவ்வாறு அறிவுகளாலே பெறுவன. அவற்றை வகைப்படுத்தி அறிவது எளிதன்று. வகைப்படுத்தி அறிந்து, பின்பு அவற்றின் வழியே இவ்வுலக வாழ்வை ஒருவன் துய்க்கப் பெறுவானாயின், அவன் வழி உலகும் இயங்கும் என்பர். அவனே மன அறிவு பெற்ற மனிதன் ஆவான். இக் கருத்தைத்தான் திருவள்ளுவர்.