பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கவிதையும் வாழ்க்கையும்


இனி, அம்மனித வாழ்வு உலகில் தோன்றி வளர்ச்சி அடைவதைப் பற்றிக் காண்போம். இப் பரந்த உலகத்தில். மனிதன் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோன்றினான் என்பது திட்டமாகக் குறிக்க முடியவில்லை. சிலர் எகிப்தின் நைல் நதி தீரத்திலும், சிலர் திராவிட நாட்டுப் பகுதியிலும் சிலர் வேறு சில இடங்களிலும் மனிதர்கள் தோன்றினார்கள், எனக் கூறுகின்றனர். நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள், பலப்பல நாடுகளிலே பலப்பலவகையான மண்டையோடுகளைக் கண்டெடுத்து, அவற்றின் மூலம் அங்கு மனிதன். இத்தனை ஆண்டுகளுக்குமுன் இவ்வகையில் வாழ்ந்தான் என்று வரையறுத்துக் கூறுகின்றார்கள். ஒரே இடத்தில் அவன் தோன்றியிருப்பான் என்பதும், ஒரே சமயத்தில் உலகின் பாகங்களில் அவன் தோன்றியிருக்கக்கூடும் என்பதும், அவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளால், புலனாகின்றது போலும்! எப்படியாயினும், மனிதன் இவ்வுலகத்தில் தோன்றிப் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டுமென்பது உண்மை.

விலங்கினத்திலிருந்து மனிதன் தோன்றினான். என்பது உண்மையானமையின், அந்த மாற்றம் மெதுவாகத்தான் நடந்திருக்க வேண்டும் என்று கொள்ளல் வேண்டும். திடீரென ஒரு நாள், விலங்காய் இருந்த ஒன்று மறுநாட்காலையில் மனிதனாக மாறிவிட்டது என்று யாரும் கூறமாட்டார்கள். அப்படி மனிதன் மாறிய அந்தக் காலத்தில் அவன் மன உணர்வு உடனே தோன்றியிராது; மிருக உணர்வே மனித உணர்வினும் மேம்பட்டிருக்கும். அவன் உண்ணும் உணவும் மிருக உணவினைப் போன்றே அமைந்திருக்கும். அந்த ஆதி மனிதனுக்கு ஆடையும், அறு சுவையும் அறியாப் பொருள்கள்; வீடும் வாசலும் விளக்க முடியாதவைகள். எங்கோ, காட்டிலும் மலையிலும் கண்டபடி விலங்கெனவே அவன் வாழ்ந்திருக்க வேண்டும். கண்டதைத் தின்று காட்டு விலங்கோடு விலங்காகவே அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் தனக்கெனப் பிற சுற்றமும் மற்றைய சார்புகளும் அக்காலத்தில்