பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

233


விட்டுவரும் ஒன்றல்லவே! வாழ்கின்ற இடத்திலேயே இக்காதல் வாழ்வு சிறக்க வேண்டுவதுதானே இயல்பு? அந்த வகையில் இந்த நால்வகை நிலத்திலும் -மனிதன் வாழத்தக்க இந்த உலகில், இந்த நால்வகைப் பரப்பிலும்-காதல் வாழ்வு நடைபெற்றது. நால்வகை நிலங்கள் உள்ளமையாலேயே இந்த உலகிற்கு “நானிலம்” என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றார்கள். இந்த நால்வகை நிலத்தொடு பாலை என்ற மற்றொரு நிலமும் பேசப்படுகின்றது. அது காலத்தால் பிந்தியது போலும்! தொல்காப்பியத்தில்,

‘நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

படுதிரை வையம் பாத்திய பண்பே’.
(அகத்திணை: 2)

என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள், ‘ஒழுக்க இடைப்பட்ட அந்த ஐந்து திணையுள் இடையில் உள்ள பாலையை உலகம் பெறாதே நிற்கும்படி செய்தார்,’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், பாலைத்திணையே பிரிவு பற்றிய ஒன்றன்றொ! உளத்தால் ஒத்த தலைவன் தலைவியாயினும் அவர்கள் பிரியும் நிலை கூடிவாழும் வாழ்வில் போற்றத்தக்க தாகுமோ? தொல்காப்பியர் பாலையின் உரிப்பொருளை,

'ஓதல் பகையே தூதில் பிரிவே." (அகத்திணை: 27)

என்று கூறுகின்றார். எனவே, பாலை அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படவில்லை. எனினும், பிற்காலச் சங்க இலக்கியங்களிலும், பின்னர் வந்த அகம் பற்றிய இலக்கண நூல்களிலும், பாலை பிற திணைகளைப் போன்றே வைத்துப் பேசப்படுகின்றது.

‘திணை’ என்ற சொல் நிலத்தை மட்டும் குறிப்பதன்று. உதட்டால் அன்றி உள்ளத்தால் பழகி வாழ்ந்த மனிதன், மண்ணையும் கல்லையும் மட்டும் கண்டு அவற்றை அறுதியிட்டிருப்பானே! அதிலும், உள்ளத்தாலே உற்றறியும் இன்ப ஒழுக்கத்துக்கு, அதன் அடிப்படையில்தானே பாகுபாடு கண்டிருப்பான்? ஆகவே, ‘திணை’ என்ற சொல்லுக்கு ‘ஒழுக்கம்’ என்பதே பொருள். மனித ஒழுக்கத்தின் அடிப்படையிலேதான் இந்த பாகுபாடு அமைகின்றது. ஒழுக்கம் என்ற

க. வா.-15