பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

கவிதையும் வாழ்க்கையும்



கூறும் அறத்தின் அடிப்படையில் அமைந்த மனித வாழ்வே-பண்பாடும் ஒழுக்கமும் அமைந்த மனித நல்வாழ்வே-தமிழர் வாழ்வு என்பது. இந்த அகவாழ்வாலும் புற வாழ்வாலும் நன்கு புலனுகிறது.

இதுவரை கூறியவற்றால், மக்கள் வாழ்வு எத்தகையதென்பதும், அவருள்ளும் தமிழர் அவ்வாழ்வை எவ்வாறு பிரித்து வாழ்ந்தனர் என்பதும், அவ்வாழ்க்கை பற்றிய வரலாறுகள் மிகு பழங்காலத் தொட்டே இலக்கிய இலக்கணங்களில் பேசப்படுகின்றன என்பதும், அவர்தம் மொழி அமைப்பே அவர்தம் வாழ்க்கையைக் காட்டுகின்றதென்பதும், அத் தமிழர் வாழ்க்கை அகம், புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டதென்பதும், அகவாழ்வு தலைவனும் தலைவியும் உள்ளத்தால் பெற்றுத் துய்க்கும் இன்பத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதும், அவ்வாழ்வு எப்படி மக்களிடையில் சிறப்புப் பெற்றிருந்ததென்பதும், அவ்வாழ்வில் இன்றியமையாது அவருடன் நின்றார் யாவர் என்பதும், அவர்தம் அகவாழ்வுக்கு அடிப்படையான முதல், கரு, உரி என்ற முப்பொருள்களும் யாவை என்பதும், அவ்வக வாழ்வைப் புலவர்கள் எவ்வாறு காட்டியுள்ளார்கள் என்பதும், அவ்வக வாழ்வைப் பாடவந்த புலவர் அதன் வழி உலகுக்கு உணர்த்தியன யாவை என்பதும், அவ்வகவாழ்வு எவ்வெவ்வாறு அமையின் சிறப்புடைத்தாகுமென்பதும், காதல் வாழ்விலும் அவர்கள் கடமையை மறக்கவில்லை என்பதும், இதுபோன்றே புறவாழ்வின் நிலை எத்தகைய தென்பதும், அப் புற வாழ்வின் ஒவ்வொரு நிலையும் எவ்வெவ்வாறு அகவாழ்வுக்குப் புறய்ை அமைகின்றது என்பதும், இப்புறப் பொருளில் காணப்பெறுவன யாவை என்பதும், அவை மனித வாழ்வோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதும், அப்புற வாழ்வு மனிதருக்கு அறிவுறுத்துவன யாவை என்பதும், அகம் புறம் என்ற இரண்டுமே மனித வாழ்வின் அமைப்பில் பிரிக்க முடியாது பிணைந்து நின்று, அவனைச் சிறந்து வாழச் செய்கின்றன என்பதும் அறிந்துகொண்டோம். இனி இவ்வாழ்வோடு மேலே கண்ட கவிதை எவ்வெவ்வாறு பிணைந்துள்ளதென்பதைச் சற்று விரிவாகக் காண்போம்,