பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கவிதையும் வாழ்க்கையும்


முடியும்; அவை கவிஞன் உயர்ந்த உள்ளத்தைப் பிரதிபலிக்கும் உணர்வுடையவையாயின். தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆங்கில நாட்டிலும் கவிதைக்கு இத்தகைய மதிப்பினைக் கொடுத்துள்ளார்கள். ஆங்கில அகராதி ஒன்று ‘கவிதை' என்பதற்குப் பொருள் கூறுங்கால், ‘கவிஞனுடைய உயர்ந்த எண்ணத்தை வெளியிடும் கலைநலம் வாய்ந்த பாடலே கவிதை,[1] என்று கூறுகிறது. அது எல்லாக் கலைநலமும் பொருந்திய உரைநடையும் கவிதையாகும் என்பதையும் விளக்குகின்றது. எனவே, கவிதை என்பது பொருளாற் சிறப்படையும் ஒன்றே என்பது தேற்றம். அதே அகராதி, கவிஞனுக்கு இலக்கண்ம் கூறுகையில். ‘கவிஞனாவான் உயர்ந்த கற்பனைத்திறனும் விரிந்த நல்ல நோக்கும் உடையவனகி, அவற்றை உலகுக்குத் தெள்ளத் தெளிய எடுத்து விளக்குபவனாயும் இருக்க வேண்டும், என்று கூறுகின்றது. இதிலேதான் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கின்றது! உலகில் வாழ்கின்ற மாந்தர் அனைவரும் தம் கண்முன் எத்தனையோ பொருள்களைக் காண்கின்றனர். அறிவற்ற விலங்குகளும் பிறவும் போக, ஆறறிவு பெற்ற மனிதன் கானும் பொருள்கள் பல. ஆனால் எல்லாப்பொருளும் மனிதனுக்கு உணர்வூட்டுவனவாக அமைகின்றனவா? பெரும்பாலும் இல்லையென்று சொல்லிவிடுவர். ஆனல், ஒரு சிலர் எல்லாப் பொருள்களிலும் இனிய நலம் பலவும் காண்கின்றனர். ஒடுகின்ற ஒடையின் கீத ஒலியும், அசையும் மரங்களின் பாட்டொலியும், வானோங்கிய மலைகளின் மாண்பும் ஒரு சிலரையே மகிழ்விக்கின்றன. அந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றவர் யாரோ அவரே கலைஞராவார். அவ்வாறு இன்பத்தில் ஆழ்தல் மட்டும் கவித்தன்மையின் நிறைவைப் பெற்றுவிட முடியாது. தான் மட்டும்


  1. 1. The Concise Oxford Dictionary of current English, p. 882. Poetry—Art or work of the poet, elevated expression or elevated thought or feeling in metrical form, prose having, all the qualities of poetry except metre.