பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

281



கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்

(முரு. 131-136)

என்று, அவர் நன்மக்கள் நிலையினை எப்படி எடுத்துக் காட்டுகின்றார்! இத்தகைய தூய உள்ளமுடையவர் நாட்டில் வாழின், நாட்டு வாழ்க்கை என்றேனும் நலிவுறுத்தப்படுமோ! இன்னும் நக்கீரர் தமது திருமுருகாற்றுப் படையில் காடும், காவும்: ஆறும், குளமும், சதுக்கமும், சந்தியும் ஆகிய பல்வேறு இடந்தோறும் அவ்வக்காலங்களில் கொண்டாடும் விழாக்களையும், பிற சிறப்புக்களையும், அம்மக்கள் வாழக்கையொடு பிணைத்துக் காட்டுகின்றார். முருகனைக் கொண்டாடும் வியன் நகர் நலமெலாம் காணும்போது அது பண்டைத் தமிழ் நாட்டு வாழ்க்கையை நமக்கு நினைவூட்டுகின்றது. அத்துடன் அவ்வந்நிலத்து இயற்கை வளங்களையும், பிற பண்புகளையும் மக்கள் வாழ்வோடு பிணைத்தே சொல்லுகின்றார். அவற்றின் சிறப்புக்களை யெல்லாம் நூல்வழியே காணலாம்.

நக்கீரரே தம் நெடுநல்வாடையைப் பாடும்போது, நம் வாழ்க்கையே வேறுவகையில் விளக்கமுறுகின்றது. வாடை -வாட்டும் வாடை-நல்வாடையாகி, அது நீண்டு விடுகின்றது. இது அவர் வாழ்வில் உள்ளதை உள்ளவாறு எப்படி விளக்குகின்றார் என்பதைக் காட்டுகின்றது. வாட்டும் வாடையை நாம் அறிவோம். அது எப்படி மக்களுக்கும் பறவை முதலியவற்றிற்கும் வருத்தம் செய்கின்றது என்பதைக் காட்டுகின்றார்.

"'கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்'

(நெடுகல். 8-12)

என்று அந்த வாடையில் நடுக்கும் இரவுக்காலத்தை அவர் காட்டும் வகை இன்றும் மெய்யாகவன்றோ விளங்குகின்றது.

க.வா-18