பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

293


வகையினரான மாந்தர் வாழ்கின்றனர். கடற்கரைப் பட்டினமல்லவா அது! அங்குள்ள வாணிப வளன் பலவாறு நன்கு விளக்கப்படுகின்றது. இதுவரையில் பிற பாடல்களிலெல்லாம் நாட்டு வாழ்க்கையும் காட்டு வாழ்க்கையும் கண்டு வந்த நமக்கு இந்நகர வாழ்வு ஒரு புதுஉணர்ச்சியை ஊட்டுகின்றது. தனித்து வாழும் திணைநில மக்களினும் வேறுபட்டாராய், வாணிகத்தின் பொருட்டு வந்துள்ள பிற நாட்டு மக்களோடு கலந்து வாழும் தமிழ்மக்களைக் காண்கின்றோம். ‘நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பலபண்டம்’ அங்கு வியாபாரப் பொருள்களாக வருவதைக் காட்டுகின்றார் புலவர்.[1]

இன்னும் அந்நகரத்தே அரசர் இருக்கையும், அமைச்சர் முதலியோர் இருக்கையும், வேளாளர், வணிகர், அந்தணர் போன்றோர் இருக்கையும் நம்முன் தெரிகின்றன. அறவழி வாழ்க்கை நடத்தும் அம்மக்களின் நல்வாழ்க்கை முறைகளும் நூல் முழுவதும் பேசப்படுகின்றன. மேம்பட்ட பண்பாட்டின் வழி ஒழுகும் அவர்தம் வாழ்க்கை இத்தகைய தென்பதைக் காட்டும்போது,

‘நெடுநுகத்துப் பகல்போல
நடுவுகின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதுஉம் மிகைகொளாது
கொடுப்பது உம் குறைகொடாது

பல்பண்டம் பகர்ந்துவீசும்’
(பட்டின. 206-21)

என்று நல்லவர் வாழும் பதி அது என்பதை விளக்குகின்றார். பல நாட்டு மக்கள் கலந்துறைவதால் அந்நகரில் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல்வேறுபட்ட மக்கள் வாழ்கின்றார்கள். சுருக்கமாகச் சொல்லக் கருதினால், இக்காலத்தில் கூறப்படும் ‘மெட்ரோபாலிட்டன்[2]’ என்ற பலர்


  1. பட்டின. 185 - 193
  2. Metropolitan City