பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

கவிதையும் வாழ்க்கையும்


அவள். வருந்தி அந்தப் புளிக்குழம்பை வைத்து வார்த்தாள் கணவனுக்கு. அதைச் சுவைத்துண்ணும் கணவனே, இனிது! இனிது!’ என்று ஏத்திப் புகழ்ந்தான். அவள் மகிழாதிருப்பாளோ! இவ் வாழ்வுக் காட்சியைத் தந்து, அதனுல் இன்றும் வாழும் புலவனை நாம் வாழ்த்துவோ மல்லமோ!

இனிக் காதலனேடு கூடி உடனிருக்கும்போதும் அவன் வெளியே சென்றிருக்குங்கால் தனிமையிலே இருக்கும்போதும் அவர்தம் வாழ்வுள்ளத்தை அணிலாடு முன்றிலார் அழகு படுத்திக் காட்டுவது நயம் பயப்பதாகும்.

‘காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.'
(குறுங் 41)

என்ற பாடலில், அவன் இருக்கும் காலத்தோ விழா ஆற்றும் நகர் விளக்கமுறுதல் போலத் தான் விளக்கமுற்றுச் சிறத்தலையும், அவன் நீங்கிய காலத்து, மக்களற்றுப் பாழ்பட்ட அணிலாடும் முற்றம் அழகழிவது போன்று தான் அழகழிந்து நிற்றலையும் தலைவி காட்டுகின்றாள். இதில் வரும் அழகிய ‘அணிலாடு முன்றில்’ என்ற உவமைத் தொடராலேயே இப் பாடலை இயற்றிய புலவர் வழங்கப்படுகின்றார். அவர் இயற்பெயர் எதுவோ? நாம் அறியோம்! எனினும், அவர் காட்டிய அழகுத் தொடரே அவரை வாழவைப்பது பெருஞ் சிறப்பன்றோ!

இத்தகைய தலைவியை விட்டுத் தலைவன் வாழ்க்கையில் பிரியாதிருக்க முடியுமோ? பொருள் கருதியும் வினை கருதியும் பல காலங்களில் பலப்பல இடங்களுக்குப் பிரிந்து செல்ல வேண்டிய தேவை அவனுக்கு உண்டன்றோ! அப்படிப் பிரியுந்தோறும் பிரியுந்தோறும், அவன் தலைவியைத் தேற்றல்