பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

309



'கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறியருந்து
குரங்குஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன்; ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னா மையினும் இனிதோ
இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே!’ (குறுங். 288)

எனப் ‘புத்தேள் நாட்டினும் அவன் நீட்டிக்கும் இன்னமை இனிமை வாய்ந்ததே.’ என்று அவனை உயர்த்திப் பேசும் தலைவி, அவனைப் பழிக்க ஒருப்படுவாளோ! அவன் நட்பினை எண்ணிய களவுக் காலத்திலேயே,

‘நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்ததன்று:
நீரினும் ஆரள வின்றே; சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனெடு நட்பே.’ (குறுங். 3)

என்று பேசும் அவள் கற்புத்திறம் பெரியதன்றோ!

அவள் கணவனோடு கலந்து, இடையறாது இன்பம் பெற்ற சிறப்பினைப் பல பாடல்கள் பாராட்டுகின்றன. வைகைப் பெருவிழாவினுள் அவன் தன் கணவனேடு நீராடச் சென்று நின்று, ஆடிய திறனையெல்லாம், ஊடிய வகையையெல்லாம். பரிமாடல் பலபடப் பாடுகின்றது. இன்னும் அகநானூற்றிலும் கலித்தொகையிலும் உள்ளத்தைத் தொடக் கூடியவாகப் பலப்பல பாடல்கள் உள்ளன. அவற்றின் நலன்களையெல்லாம் நாடொறும் நாடொறும் அறிஞர் பற்பலர் புதுப்புது வழியில் ஆராய்ந்து, கற்றாரும் மற்றாரும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், அழகழகாக விளக்கிக் கொண்டே வருகின்றனர்! 'பயில்தொறும் நூல் நயம் போலும்’ என்று வள்ளுவர் குறித்தாற் போன்று. இப்பாடல்கள் பயிலப் பயிலப் புதுப்புதுப் பொருள்கள் தந்து அகப்பொருளின் நலத்தையே சிறப்பித்து நிற்கின்றன. இவற்றின் விரிவெல்லாம் நம் ஏட்டு எல்லையில் அடங்கா. எனவே, எல்லாவற்றையும் கூருது, இன்னும் இரண்டொன்று கண்டு புறவாழ்வைக் காணலாம்.