பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

கவிதையும் வாழ்க்கையும்


அவ்வாறு நோக்கும்போது எல்லா உயிர்களையும் தழுவிச் செல்லும் சமரச மனப்பான்மை உடையது என்பதும், ஒருகால் வாடியும் மற்றொருகால் மலர்ந்தும் இல்லாது, என்றும் எக்காலத்தும் ஒரு தன்மைத்தாகவே இருக்கும் என்பதும், அத்தகைய அறிவுடையார் வழியே உலக வாழ்க்கை மாசற்றுச் சிறக்கின்றது என்பதும் வள்ளுவர் காட்டும் விளக்கங்களாம்.

இனி, வள்ளுவர் கல்வியைக் காணும் முறையினையும், அது வாழ்வொடு பொருந்தும் வகையினையும் காண்போம். திருவள்ளுவர்தம் கல்வி முறையும் மக்கள் சமுதாயத்தை வாழ வைக்கும் முறையிலேதான் செல்கின்றது. எண்ணும் எழுத்தும் கற்றுத் தேர்ச்சி பெற்று, ஏதோ பதவியை நாடிச் செல்லும் வகையிலேதான் இன்றைய கல்வி முறை அமைகின்றது எனலாம். படிக்கும் பள்ளிச் சிறுவனையோ, கல்லூரி மாணவனையோ, ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால் உடனே "ஏதாவது ஒர் உத்தியோகத்திற்குப் போக’ என்று திட்டமாக விடை கூறிவிடுவான். எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா இல்லையா என்பதுபற்றி நாம் ஆராய வேண்டா. ஆனால், இக்காலக் கல்வியின் குறிக்கோள் அப்படியிருக்கின்றது என்பது. மட்டும் அறிதல் போதும். ஆனால், திருக்குறளை உணர்ந்து பயில்கின்ற ஒருவனை நோக்கி, நீ எதற்காகப் படிக்கின்றாய்? என்று கேட்டால், ‘அதற்குத் தக நிற்க,’ என்று திட்டமாகப் பதில் சொல்லுவான். எனவே, படிப்பு என்பது ஏதோ ஆண்டு தோறும் தேர்வில் வெற்றி பெறுவதற்காக, ‘மார்க்கு’ எண்ணும் ஒன்றாக அமையவில்லை என்பதும், அது வாழ்வை வகுக்கவே பயன்படுவது என்பதும் தேற்றம். எதைக் கற்க வேண்டும்?' என்னும் கேள்விகள் அனைத்தையும் ஒன்றாக்கி,

'கற்க கசடறக் கற்பவை: கற்றபின்
கிற்க அதற்குத் தக' (குறள். 391)

என்கிறார் வள்ளுவர். எனவே, படிக்க வேண்டியவற்றைப் படிக்க வேண்டும். ஏதாவது பொழுதுபோக்குக்கென்று எத்தனையோ கதைப் புத்தகங்களைப் படிக்கின்றோம். ஆயினும்,