பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

கவிதையும் வாழ்க்கையும்


மற்றைய செல்வங்களைப் பற்றியெல்லாம் அவர் சிறப்பித்துக் கூறுகின்றார், கல்வியைச் செல்வமாக்குவார் அவர்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை.' (குறள். 400)

என்று அவர் கல்வியைக் கெடாத செல்வமாகக் கூறுகின்றார். அது எப்படிக் கெடக்கூடும்? தாம் இன்புறுவதை உலகு இன்புறக் காணலாகிய அந்த மெய்ந்நெறி வாழ்க்கை அளிக்கும் கல்வி இம்மையில் மட்டுமன்றி ஏழெழு பிறப்பிலும் கெடாத செல்வம் என்பதை,

'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.' (குறள். 398)

என்று விளக்குகின்றார். இனி, கேள்வியைப் பற்றிக் கூறும் போது அதையே செல்வத்தின் தலைமை நிலையிலே வைத்துக் காட்டுகின்றார். எத்துணைக் கற்ற போதிலும் வழுக்கி விழும் மக்கள் உலகில் என்றுமே வாழ்கின்றார்கள். இன்றைக்கு உலகில் அதிகமாகப் படித்த நாடுகள்தாமே, உலகப் போராட்டங்களுக்கு வித்துன்றிக் கொடுமையை விளைத்து வருகின்றன? ஆனால், வள்ளுவர் முறைப்படி அவர்தம் கல்வியெல்லாம் கல்வியாகா. அன்றி, அவ்வாறு அவை கல்வி என்றே கொண்டாலும் அதனால் அவை பயன் பெறவில்லை. காரணம் என்ன? கேள்வி அறிவு இல்லாமையே தான். தாம் எவ்வளவு கற்றவராய் இருப்பினும் மற்றவர் கூறுவதைச் செவிமடுத்து, அவர்தம் சொற்படி ஆராய்ந்து நடத்தலே அறிவுடைமை. உலக அரங்கத்தே கல்வியில் சிறந்த நாடுகள், இந்திய நாடு போன்ற அறநெறி போற்றும் நாடுகளின் சொற்களைக் கேட்டு நடக்கத் தலைப்படின், உலகில் போரும் பிணக்கும் உண்டாகுமா? அதனாலேதான், உலகம் வாழ, உலகச் சமுதாயம் சீர்பெற, மக்கள் நலம் பெற்ருேங்க, மற்றெல்லாச் செல்வத்திலும் கேள்விச் செல்வம் சிறந்தது என்கிறார்.


‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலே.’ (குறள், 411)